திங்கள், 17 மார்ச், 2014

9. நம்பிக்கை இல்லம்.....

கலெக்டர் சகாயம் மக்கள் குறை கேட்க கிராமம் தோறும் செல்வது வழக்கம் அவ்வாறு கொல்லிமலை, சேளூர் நாடு கிராமத்திற்கு சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குட்டியாண்டி சின்னையன் என்பவர் தனது வறுமை காரணமாக தனது ஊனமுற்ற மகனை படிக்க வைக்க இயலவில்லை என கண்ணீர்விட்டார். அவரது பிரச்சனையை முழுமையாக கேட்டறிந்த கலெக்டர் சகாயம், உடனடியாக அவரது மகன் மணிகண்டனை நம்பிக்கை இல்லத்தில் சேர்த்தார்.

இதேபோல் பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஊஞ்சல்பாளையம் கிராமத்திற்கு சென்ற போது கணவனை இழந்த சிங்காரி என்ற பெண் வறுமை காரணமாக தனது இரண்டு பெண்குழந்தைகளையும் வைத்து பராமரிக்க இயலவில்லை எனக் கூற அவரது ஒரு பெண் குழந்தையான வினோதினியை நம்பிக்கை இல்லத்தில் சேர்த்தார்.

இதேபோல் தாய் தந்தையரை இழந்த பவானி என்ற கல்லூரி மாணவியும், நாமகிரிப்பேட்டை பகுதியில் வீதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மனநிலை சற்றே பாதிப்படைந்த அருண்குமார் என்ற சிறுவனும் நம்பிக்கை இல்லம் வந்தனர். இன்று நம்பிக்கை இல்லத்தில் 6 குழந்தைகள் உள்ளனர். இவர்களைப் பராமரிக்க கணவனை இழந்த விதவையான செல்லம்மாள்(52) நியமிக்கப்பட்டுள்ளார்.கல்லூரி நேரம் போக இவருக்கு உறுதுணையாக பவானியும் குழந்தைகளை பராமரித்து வருகிறார்.

இந்த இல்லத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு தமிழ்வழி கல்வி, ஆங்கிலம், தற்காப்பு கலை, தமிழர் பண்பாட்டுக் கலைகள் கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இல்லத்திற்கு ஈகை உள்ளம் கொண்டவர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்,

இதுபோன்ற குழந்தைகள் பெற்றோர் மற்றும் சொந்தபந்தங்களின் அரவணைப்பு இல்லாததால், தங்கள் மீது அன்பைப் பொழியும் உள்ளங்களைத் தேடுவார்கள். பணமில்லாவிட்டாலும் மனமுள்ளவர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அந்தக் குழந்தைகளின் ஓய்வுப்பொழுதில் அவர்களின் நேரத்தைச் செலவிட்டு தங்கள் அன்பைக்கொடுக்கலாம். அந்தக் குழந்தைகளுக்கும் நம் மீது அன்பு காட்ட எவ்வள‌வு பேர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமல்லவா?

அந்த சந்தோசம் அவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்பது அவர்களுக்காக பணம் காசைக் கொடுப்பவர்களைவிட தங்கள் அன்பை பகிர்ந்துகொடுப்பவர்களே அதிகம் தேவை"

நம்பிக்கை  இல்லத்திற்கு பல்வேறு உதவிகளை வழங்கிய நாமக்கல்லைச் சேர்ந்த பஸ் அதிபர் தயாளன் சொல்கிறார்:- கலெக்டர் சகாயம் நாமக்கல் மாவட்டத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்.. அனைத்து அதிகாரிகளுக்கும் முன் மாதிரியான அவர் விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கு செய்யும் தொண்டு அளப்பரியது. எங்களது பாப்பு ரெட்டியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் ஆதரவற்ற பெண்களின் மத்தியில் அவர் பேசியது அந்த பெண்களின் தாழ்வு மனப்பான்மையை போக்கி அவர்களை இன்று செழுமைப்படுத்தி உள்ளது.

தூய்மையான எண்ணம் கொண்ட அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றினை தொடங்கப்போவதாக நானும் எனது நண்பர் விஜயகுமாரும் கேள்விப்பட்டோம். உதவ சென்றபோது ரொக்கமாக பெற மறுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக நாங்கள் சமையல் கூடத்திற்கான பொருட்களை வழங்கினோம்.இன்னும் அந்த இல்லத்திற்காகவும் அந்த குழந்தைகளின் நலனிற்காகவும் பல்வேறு உதவிகளை வழங்க தயாராக எப்போதுமே உள்ளோம் என்கிறார்.

இப்போது சகாயம் அங்கு இல்லையென்றாலும் அவரின் நல்லெண்ணத்தால் உருவான நம்பிக்கை இல்லம் நல்லெண்ணம் உள்ள பலரால் உதவிக்கரம் நீட்டப்பட்டு நடந்து வருகிறது.  சகாயம் இன்னும் கொஞ்சகாலம்அங்கு ஆட்சியராக இருந்திருந்தால் நம்பிக்கை இல்லத்துக்கு ஒரு நிரந்தரமான கட்டிடம் உருவாகியிருக்கும். நம்பிக்கை இல்லம் நம்பிக்கையோடு எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் இல்லாமல் அமைய கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்.  

சகாயம்,நாமக்கல் செல்லும்போதெல்லாம் நம்பிக்கை இல்லத்தை பார்க்காமல் திரும்புவதில்லை. இந்த நம்பிக்கை இல்லம் தாராள மனதுடையவர்களின் கண்பார்வை பட்டால் அது பெரும் உதவியாக இருக்கும்; இன்னும் நிரந்தரமாகவும் நல்ல பல திட்டங்களுடன் நம்பிக்கை இல்லத்தைச் செயற்படுத்துவது குறித்தே பல நேரங்களில் சிந்திக்கிறார், சகாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக