திங்கள், 17 மார்ச், 2014

8. "கிராமத் தங்கல்"

இதற்கு எடுத்துக்காட்டாக நாமே கிராமங்களில் போய் தங்குவது வாரத்திலோ மாதத்திலோஒருநாள் என்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினார்.


எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இரவு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வாகன ஓட்டியை மட்டும் கூட்டிக்கொண்டு தன் உதவியாளர்களைக்கூட யாரையும்அழைத்துக்கொள்ளாமல் திடீர் என்று ஒரு கிராமத்துக்குப் போவார். அங்கு போனபின்தான் கிராமத்துக்கு கலெக்டர் வந்த விசயமே தெரியும். அந்த ஊரின் மையப்பகுதியில் ஒரு கட்டிலைக் கொண்டுவரச் சொல்லி போடச் சொல்லி உட்கார்ந்து கொள்வார்,சகாயம்.


ஊர் பெரியவர்கள் கலெக்டர் வந்ததை அறிந்து ஒவ்வொருவராக வந்து பார்ப்பது,
என்று கொஞ்ச நேரத்தில் ஊரே அங்கு கூடிவிடும்.  சொல்லுங்க ஒங்க ஊர்ல என்ன‌பிரச்னையெல்லாம் இருக்கு? உடனடியா செய்ய வேண்டியது என்ன?  குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு பிரச்னைகள் குறித்துச்சொன்ன நாலைந்துபேர்களை மட்டும் இருக்கச் சொல்லுவார்,சகாயம்.


அவர்களிடமிருந்து மேலும் விபரமாக பிரச்னைகளின் ஆழம் குறித்து அறிந்துகொண்டுஅங்குள்ள பள்ளிக்கூடம் அல்லது காற்றோட்டமாக அந்தக் கட்டிலிலேயே வீட்டிலிருந்துகொண்டு வந்த போர்வை தலையணை சகிதமாக இரவைக் கழிப்பது வழக்கம்.  தூக்கம்வராத கொசுக்கடி இரவில் விடியவிடிய புரண்டுகொண்டே இருந்து காலையில்அந்தக் கிராமத்து பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய உயர் அதிகாரிகளை அங்கேயேவரவழைத்து உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்னைகளை அங்கேயே அப்போதேதீர்த்துத் திரும்புவதுதான் சகாயம் ஸ்பெசல் "கிராமத் தங்கல்" ஆகும்.


கிராம மக்கள் பிரச்னைகள் இல்லாத ஊர் எதாவது இருக்கிறதா,என்ன?  சாலை,குடிநீர்வசதி,தெருவிளக்கு,மேல் நிலைக் குடிநீர் தொட்டி,அடிபைப், சுடுகாட்டுப் பிரச்னை, கழிவு நீர் வெளியேறாமல் தேங்கிக் கிடக்கும் சாக்கடை, கிராமத்துக்கு வரும் ஒரு பேருந்தும் வருவதில்லை, பள்ளி கட்டிடம் மராமத்து செய்யக்கோருதல் இப்படி பட்டியலுக்குள் அடங்காத பல பிரச்னைகள் அவர்களைச் சுற்றி எப்போதும் நெருக்கிக்கொண்டே இருக்கும்.


கிராமம் சார்ந்த அரசின் நலத்திட்டங்கள் கிராமத்துக்கு சென்றடைந்ததா என்பதையெல்லாம்வெகு சிரத்தையோடு விசாரிப்பார்.  அரசின் நலத்திட்டங்கள் நூறுவிழுக்காடு நிறைவேற்றப்பட‌வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்படுவார். உடனே ஆளுங்கட்சிச் சாயம் அவர் மீதுபூசப்படுவதும் நடக்கும்; இதையெல்லாம் சகாயம் கண்டுகொள்வதில்லை. என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று அதில் மட்டுமே கவனம் செலுத்துவார்.


எத்தனையோ தடவை பென்சன் கேட்டு அலையோ அலைன்னு அலைந்ததை மவராசன்எங்க கிராமத்துக்கே வந்து குடுத்திட்டுப்போன தெய்வமுங்க அவர்! பட்டா மாத்திக்கேட்டுஅலைஞ்சு செருப்புத் தேய்ஞ்சதுதான் மிச்சம்ன்னு இருந்தேன்.  தாசில்தார இங்கயே வரச்சொல்லி குடுஙக பட்டாவைன்னு குடுத்தார் கலெக்டர்!  தண்ணி பைப்புல காத்துதான்வந்துகிட்டு இருந்துச்சு. அவரு வந்துட்டுப் போனார் பின்னாடியே வந்து போரு போட்டுஅடி பைப்பு போட்டுக் குடுக்கவச்சாருங்க!


இப்படியான வாழ்த்தொலிகள் சகாயத்தின் கிராமத்தங்கலுக்குப் பிறகு கிராமங்களில்கேட்கத் துவங்கியது. இதனால் எங்க கிராமத்துக்கு கலெக்டர் வரமாட்டாரா? எங்க பிரச்னையத்தீக்கமாட்டாரா? என்ற எதிர்பார்ப்புக்கள் கிராமங்களில் நிலவ வைத்துவிட்டார் சகாயம்!

கிராம குறை தீர் மன்றங்கள்.....


இப்படிக் கிராமங்களில் தங்கிய பிறகு பின்னிரவு தாண்டியும் சில பெரிசுகள் பேசிக்கொண்டதில்சின்னச் சின்ன பிரச்னைகள்கூட வழக்குகளாகி நீதிமன்றப் படிக்கட்டுகளுக்கு நடந்து நடந்துநேரம், பொருள் விரயம் செய்யும் போக்கைக் கேட்டு என்ன செய்யலாம்? என்ற‌ சிந்தனைஎழுந்தது.  அதன் விளைவாக "கிராம குறை தீர் மன்றங்கள்" உருவானது.


காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த கடிதம் ஒன்றை ஆட்சியர் சகாயம்படிக்கிறார்.  அந்தக் கடிதத்திலிருந்த சம்பவம் அவர் மாவட்ட வருவாய் அதிகாரியாக காஞ்சிபுரத்தில் இருக்கும் போது நடந்தது என்பது அவர் மனக் கண் முன் விரிகிறது.


24.11.03 காலை பத்துமணி....காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம்.....பொதுமக்களும், அலுவலர்களுமாக பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது... அவரவர் பணிகளில் ஆழ்ந்திருந்த நேரம்..... அம்மா...!....ஐயோ......! அம்மா...! என ஒரு கூக்குரல் கலெக்டர் அலுவலகத்தையே உலுக்குகிறது.. அனைவரும்  அலுவலகத்தின் முன் பகுதிக்கு ஓடுகிறார்கள்... வாசலில் ஒரு பெண்....... தீயில் எரிந்து கொண்டிருக்கிறார்... அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்.. துடித்துக் கொண்டு கீழே விழுகிறார் ....கொஞ்சம்... கொஞ்சமாக அவரது ஆன்மா அடங்குகிறது.... நீதி செத்ததால் மதுரையையே எரித்த கண்ணகி போல நீதிக்காக தன் உயிரையே மாய்த்து கொண்டது ஒரு ஜீவன்.....


அப்போதைய மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனு எழுதி வைத்துவிட்டு அந்தப் பெண் தன் உயிரை விட்ட சம்பவத்தை
நாமக்கல் மாவட்ட ஆட்சியரான பின் எண்ணிப்பார்க்கிறார்.


சுந்தரமூர்த்தி-பிரேமா கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர்.தங்களுக்குள் வளர்த்த காதலால் இருவருமே போராட்டத்தையே வாழ்க்கையாக்கி கொண்டிருந்தனர். தங்களது கலப்பு திருமணத்தால் எழுந்த எதிர்ப்பு காரணமாக இருவரும் சொந்த பந்தங்களை உதறிவிட்டு கண்காணாத தேசமாக காஞ்சிபுரம் வந்தனர். வாழ வழி கிடைக்க கீழம்பி கிராமத்தையே தங்களது பூர்வீகமாக்கிக் கொண்டனர்.  25.3.2000 த்தில் ஆண் மகவை பெற்றனர். சுந்தரமூர்த்தியும் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அதே கிராமத்தில் கொஞ்சம் நிலங்களை வாங்கி வீடும் கட்டினார்.. இந்நிலையில் 21.08.2001 ல் அழகான பெண் மகவை பெற்றனர்.


இந்நிலையில் சுந்தரமூர்த்தியின் வீடு இருந்த பகுதியில் மரங்கள் அடர்ந்த தோட்டப்பகுதி இருந்தது. இந்த மறைவான பகுதி நாளடைவில் சமூகவீரோதிகளின் கூடாரமானது. இதனால் அருகில் இருந்த சுந்தரமூர்த்தியின் குடும்பத்திற்கு பல்வேறு வகைகளில் இடையூறு வந்தது.

சமூக விரோதிகளிடம் அன்பாகவும் நயந்தும் சுந்தரமூர்த்தி  சொல்லிப் பார்த்தார்.  கேட்கவில்லை. இதனை சகித்து கொண்டு வாழ்க்கையை ஓட்டிய சுந்தரமூர்த்தியின் குடும்பத்திற்கு மேலும் சிக்கல்கள் தொடங்கின.  குடிபோதையில் கயவர்கள் பிரேமாவின் கையைப் பிடித்து இழுக்கும் அளவிற்கு போனது.   கிளர்ந்து எழுந்தார் பிரேமா. உள்ளூர் காவல் நிலையம் சென்றார். நியாயம் கிடைக்க வில்லை. டிஎஸ்பியிடம் சென்றார் நியாயம் கிடைக்கவில்லை.எஸ்பியிடம் முறையிட்டார். ஒன்றுமே நடக்கவில்லை.


இறுதியில் கிடைத்தது..பிரேமாவிற்கு வேசிப் பட்டம். நொந்து போனார் பிரேமா; மனம் வெதும்பிய அவர் தனது கணவனிடம் கூட கூறாமல் கலெக்டர் அலுவலகம் சென்றார். தனது மனக்குமுறல்களை தனக்கு நேர்ந்த அநீதியை விரிவாக .  எழுதி வைத்து விட்டு  தனது கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் நடத்தினாள்  இந்த சீதை. ஆனால் காக்கத்தான் எந்த கடவுளும் வரவில்லை.


பிரேமாவின் மறைவிற்கு பிறகு மனதொடிந்த சுந்தரமூர்த்தி தனது இரு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு தனது சொத்துக்களை விட்டு விட்டு...... தனது நண்பர்களைத் தேடி கிளம்பினார். நண்பர் பொன்னுசாமி ஆதரவு கரம் நீட்டினார்.. பற்றிக் கொண்ட சுந்தரமூர்த்தி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பக்கம் உள்ள பச்சுடையாம்பட்டியில் குடியேறி தனது குழந்தைகளுக்காக வாழத் தொடங்கினார். தன்னிடம் இருந்த பாடல் திறமையால் தனது வாழ்க்கையை நகர்த்தினார்.


கடுமையான உழைப்பும், பிரேமாவின் இழப்பும் சுந்தரமூர்த்தியை வெகுவாகப் பாதிக்க... கடந்த 15.12.2008 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரும் மரணமடைந்தார்.


இதற்கிடையே பிரேமாவின் சாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனித உரிமைகள் அமைப்பு நண்பர்கள் பலர் போராடிக் கொண்டிருந்தனர்.இந்த போராட்டத்தின் பலனாக பிரேமாவின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.ஒரு லட்சத்தினை அரசு அறிவித்தது. இந்த நிவாரணத் தொகையை வழங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பிரேமாவின் குடும்பத்தை தேடியது....


அந்த குடும்பம் நாமக்கல் அருகே இருப்பதை அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. இந்த கடிதத்தை படித்த கலெக்டர் சகாயம் உடனடியாக அந்தக் குடும்பத்தை வரவழைத்தார். சுந்தரமூர்த்தியின் நண்பரான பொன்னுசாமி அநாதையாகிவிட்ட அந்த இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்.அவர்களின் கதையைக் கேட்ட கலெக்டர் சகாயம், தான் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.வோவாக இருந்தபோது நடைபெற்ற சம்பவம் தான் இது என்பதை உறுதிபடுத்திக் கொண்டார். அந்த சம்பவத்தை நேரில் பார்த்ததன் பாதிப்பு இன்றும் அவரது மனதில் இருந்ததால் தாய் தந்தை இல்லாத சூழலில் அவர்களை பெற்றோர் இல்லை என்ற குறை தெரியாமல் வளர என்ன செய்வது என்று சிந்தித்தார்.


நிவாரணத் தொகை ஒரு லட்சத்தை குழந்தைகள் நந்தா(எ)நாராயணதாசன், பாரதி(எ) சத்ய சூரிய பாரதிக்கு கிடைக்க ஏற்பாடு செய்ததுடன் அந்த தொகையை அவர்களின் பேரில் வருங்கால வைப்பு நிதியாகவும் டெப்பாஸிட் செய்ய ஏற்பாடு செய்தார். மேலும் பொன்னுசாமியிடம் அந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கவும் அறிவுறுத்தினார்.இந்நிலையில் கீழம்பி கிராமத்திலிருந்து சுந்தரமூர்த்தியின் நண்பர்கள் என கூறிக் கொண்டு சிலர் அந்த குழந்தைகளை தாங்கள் வளர்ப்பதாக கூறி கலெக்டரை சந்தித்தினர். அவர்களிடம் பேசிய கலெக்டர் சகாயம், வந்தவர்களின் மனதில் உண்மை இல்லை என்பதை அறிந்து குழந்தைகளை அனுப்ப மறுத்ததுடன். கீழம்பியில் உள்ள சுந்தரமூர்த்தியின் சொத்துக்களை பாதுகாக்கவும் ஏற்பாடு செய்தார்.


பொன்னுசாமியின் அரவணைப்பில் குழந்தைகள் வளர்ந்து வந்த நிலையில் பொன்னுசாமியும் வயோதிகம் காரணமாக இயற்கை எய்தினார். ஈகைக் குணம் இருந்தும் வறுமை காரணமாக  பொன்னுசாமியின் மகனால் குழந்தைகளைப் பராமரிக்க இயலவில்லை. கலெக்டர் சகாயத்தினை நேரில் சந்தித்த அவர் தனது நிலைமையை கூற... கலெக்டர் அந்த குழந்தைகளைப் பராமரிக்கும்படி ஒரு காப்பகத்துக்கு அனுப்பினார்.


திடீரென்று வேறு அலுவலாகச் சென்ற கலெக்டர் சகாயம்,குழந்தைகளை விட்டிருந்த காப்பகத்துக்கு முன்னறிவிப்பின்றிச் சென்றபோது குழந்தைகள் அங்கு இல்லாததைக் கண்டு திடுக்கிட்டார். குழந்தைகள தேடிப்பிடித்து விசாரித்ததில்,காப்பகத்துச் சூழல் பிடிக்காமல் ஓடிப்போனதாக தெரிவித்திருக்கின்றனர்.   தாம் தவறான இடத்தில் விட்டுவிட்டோமே என்று சகாயம் வருந்தினார்.


அப்போது அவர் மனதில் ஒரு புதிய எண்ணம் தோன்றியது.. இதனை தனது சக அலுவலர்களிடம் கூற உடனடியாக ஒரு குழந்தைகள் காப்பகம் உருவானது. அதற்கு கலெக்டர்,சகாயம்,  "நம்பிக்கை இல்லம்" என்ற பெயரும் சூட்டினார்.


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பொரசபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான  வாடகை வீட்டில் இந்த இல்லம் தொடங்கப்பட்டது அந்த இரு குழந்தைகளையும் இந்த இல்லத்தில் பராமரிக்க ஏற்பாடு செய்தார். மேலும் தான் அரசு அலுவலர் என்ற காரணத்தாலும் தான் வேறு ஊருக்கு  மாற்றப்படலாம் என்பதாலும் தன்னால் நேரடியாக இந்த இல்லத்தை கண்காணிக்க முடியாது என்பதாலும் ஒரு டிரஸ்ட் உருவாக்க ஏற்பாடு செய்ததுடன் இதற்காக நேர்மையாகவும், தொண்டு புரியும் மனப்பான்மையு முள்ள‌ நாமக்கல்லை சேர்ந்த சிலரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார். 

மனோகரன் கந்தசாமி மற்றும் வழக்கறிஞர் காயத்திரி தேவி என்பவரையும் நிர்வாக அறங்காவலர்களாகக் கொண்ட‌ நம்பிக்கை இல்லத்தினை கடந்த 5.12.2009 அன்று முறைப்படி பதிவு செய்யப்பட்டது ( பதிவு எண்.1270/2009). அந்த நம்பிக்கை இல்லத்தில் குழந்தைகளைக் கவனிக்க தாயுள்ளத்தோடு ஒருவரை நியமிக்க ஆவன செய்தார். தன் சொந்தப்பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை முதல் நிதியாக கலெக்டர் சகாயம் வழங்கினார்.

இப்படி உருவான நம்பிக்கை இல்லத்துக்கு அரசு அலுவலர்கள் மாதம் தோறும் ஒரு சிறு தொகையை தங்கள் பங்களிப்பாக மனமுவந்து கொடுக்க முன்வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக