ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

11. நவீன்...இன்னும் என மனதில் சோகமாய்.......!

மனு நீதிநாளில்தான் சகாயம் மனுவாங்குவார் என்று திங்கட்கிழமைக்காக மக்கள் காத்திருப்பதில்லை;  அலுவலகத்திலி ருந்து இல்லத்துக்கு மதிய உணவுக்கு வரும் நேரத்தில் கூட பலர் மனுக்கொடுக்க காத்திருப்பது வழக்கம். அலுவலகம்முடிந்து மாலையில் இல்லம் வரும் பழக்கம் இல்லாத சகாயம், ஆய்வுப் பணிகள், அதிரடிச் சோதனைகள் என்று போய்விடுவார்.  ஆனால் எப்படியும் இல்லத்துக்கு வந்துதானே ஆக வேண்டும் என்று மாலையிலிருந்து இரவு அவர் பத்து மணிக்கு வந்தாலும் 
பத்துப்பேர் மனுவோடும் நம்பிக்கையோடும் காத்திருந்து பார்த்துச் செல்வதை வழக்கமான பழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அன்றும் அப்படித்தான் மதிய உணவுக்காக மாவட்ட ஆட்சியரக அலுவலகத்திலிருந்து திரும்பிய‌ சகாயம் கார் முகாம் அலுவலகம் வழியாக இல்லத்துக்குள் நுழைந்தபோது மனுக்கொடுக்க‌
ஒரு கூட்டம் நிற்பதையும் அதில் ஏழெட்டு வயது நிரம்பிய பாலகன் ஒருவனும் நின்றுகொண்டிருப்பதை சகாயம் காரிலிருந்தவாறே பார்த்துவிடுகிறார்.  காரிலிருந்து இறங்கியதும் தனது உதவியாளரை
அனுப்பி அந்தச் சிறுவனை அழைத்து வரச் சொல்கிறார்.  மதிய உணவுக்குச் செல்லாமல் முகாம் அலுவலகத்துக்குள் போய் அமர்ந்துகொண்டு சிறுவனை விசாரிக்கிறார்.

சிறுவன் வாய்ச் சொல் மனுவைக் கேட்ட சகாயம் கொஞ்சம் அதிர்ந்து போகிறார்; இந்த‌ நாட்டில என்ன நடக்குது? என்று பசி மயக்கத்திலும் சிறுவனை கரிசனத்தோடு பார்த்துக் கேட்கிறார். சிறுவன் சொல்கிறான்.

"எங்க அப்பாவைவிட்டுட்டு ஓடிப்போன அம்மாவை எப்படியாச்சும் கண்டுபிடிச்சு எங்க அப்பாவோட‌சேத்து வெக்கணும். எனக்கும் எங்க அம்மா வேணும்..."

"உனக்கு உங்க அம்மான்னா ரெம்பப் பிரியமா?"

"ஆமா"

"எந்த வகுப்பு படிக்கிற?"

"5 ம் வகுப்பு படிக்கிறேன்"

"படிச்சு என்ன ஆகனும்ன்னு நினைக்கிற‌"

"பெரிய காவல்துறை அதிகாரியா வர ஆசைப்படுறேன்"

"மதியம் 3 மணி ஆகப்போகுதே...சாப்பிட்டியா?"

"இல்லைங்க அய்யா"

"சரி....வா இன்னைக்கு என்னோட சாப்பிடலாம்....வா"

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியரை வரச் சொல்லி, அவரும் வந்துவிட்டார். இந்தப் பையன் சொல்ற பிரச்னையை நீங்களே ஹேண்டில் பண்ணி சீக்கிரமா அந்தப் பையனோட அம்மாவைக் கண்டு பிடிச்சு ஒரு சுமூகமான ஏற்பாட்டைப் பண்ணீட்டு எனக்கு தகவல் சொல்லுங்க. கொஞ்சம் பர்சனலா இத டீல் பண்ணுங்க..." சகாயம் இட்ட வாய்மொழி உத்திரவை  ஏற்றுக் கொண்டு நகர்கிறார்.

சிறுவன்  நவீனை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் போய் துணைவியாரை அழைத்து ரெண்டுபேருக்கும் சாப்பாடு எடுத்துவைக்கும்படி சொல்கிறார்.

_Kabilar kurichi - naveen's village