ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

11. நவீன்...இன்னும் என மனதில் சோகமாய்.......!

மனு நீதிநாளில்தான் சகாயம் மனுவாங்குவார் என்று திங்கட்கிழமைக்காக மக்கள் காத்திருப்பதில்லை;  அலுவலகத்திலி ருந்து இல்லத்துக்கு மதிய உணவுக்கு வரும் நேரத்தில் கூட பலர் மனுக்கொடுக்க காத்திருப்பது வழக்கம். அலுவலகம்முடிந்து மாலையில் இல்லம் வரும் பழக்கம் இல்லாத சகாயம், ஆய்வுப் பணிகள், அதிரடிச் சோதனைகள் என்று போய்விடுவார்.  ஆனால் எப்படியும் இல்லத்துக்கு வந்துதானே ஆக வேண்டும் என்று மாலையிலிருந்து இரவு அவர் பத்து மணிக்கு வந்தாலும் 
பத்துப்பேர் மனுவோடும் நம்பிக்கையோடும் காத்திருந்து பார்த்துச் செல்வதை வழக்கமான பழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அன்றும் அப்படித்தான் மதிய உணவுக்காக மாவட்ட ஆட்சியரக அலுவலகத்திலிருந்து திரும்பிய‌ சகாயம் கார் முகாம் அலுவலகம் வழியாக இல்லத்துக்குள் நுழைந்தபோது மனுக்கொடுக்க‌
ஒரு கூட்டம் நிற்பதையும் அதில் ஏழெட்டு வயது நிரம்பிய பாலகன் ஒருவனும் நின்றுகொண்டிருப்பதை சகாயம் காரிலிருந்தவாறே பார்த்துவிடுகிறார்.  காரிலிருந்து இறங்கியதும் தனது உதவியாளரை
அனுப்பி அந்தச் சிறுவனை அழைத்து வரச் சொல்கிறார்.  மதிய உணவுக்குச் செல்லாமல் முகாம் அலுவலகத்துக்குள் போய் அமர்ந்துகொண்டு சிறுவனை விசாரிக்கிறார்.

சிறுவன் வாய்ச் சொல் மனுவைக் கேட்ட சகாயம் கொஞ்சம் அதிர்ந்து போகிறார்; இந்த‌ நாட்டில என்ன நடக்குது? என்று பசி மயக்கத்திலும் சிறுவனை கரிசனத்தோடு பார்த்துக் கேட்கிறார். சிறுவன் சொல்கிறான்.

"எங்க அப்பாவைவிட்டுட்டு ஓடிப்போன அம்மாவை எப்படியாச்சும் கண்டுபிடிச்சு எங்க அப்பாவோட‌சேத்து வெக்கணும். எனக்கும் எங்க அம்மா வேணும்..."

"உனக்கு உங்க அம்மான்னா ரெம்பப் பிரியமா?"

"ஆமா"

"எந்த வகுப்பு படிக்கிற?"

"5 ம் வகுப்பு படிக்கிறேன்"

"படிச்சு என்ன ஆகனும்ன்னு நினைக்கிற‌"

"பெரிய காவல்துறை அதிகாரியா வர ஆசைப்படுறேன்"

"மதியம் 3 மணி ஆகப்போகுதே...சாப்பிட்டியா?"

"இல்லைங்க அய்யா"

"சரி....வா இன்னைக்கு என்னோட சாப்பிடலாம்....வா"

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியரை வரச் சொல்லி, அவரும் வந்துவிட்டார். இந்தப் பையன் சொல்ற பிரச்னையை நீங்களே ஹேண்டில் பண்ணி சீக்கிரமா அந்தப் பையனோட அம்மாவைக் கண்டு பிடிச்சு ஒரு சுமூகமான ஏற்பாட்டைப் பண்ணீட்டு எனக்கு தகவல் சொல்லுங்க. கொஞ்சம் பர்சனலா இத டீல் பண்ணுங்க..." சகாயம் இட்ட வாய்மொழி உத்திரவை  ஏற்றுக் கொண்டு நகர்கிறார்.

சிறுவன்  நவீனை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் போய் துணைவியாரை அழைத்து ரெண்டுபேருக்கும் சாப்பாடு எடுத்துவைக்கும்படி சொல்கிறார்.

_Kabilar kurichi - naveen's village

ஞாயிறு, 30 மார்ச், 2014

10. கவனிப்பாரின்றிப்போன சுதந்திரப் போராட்ட தியாகி

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம் பொது மக்களிடம் மனு வாங்கிக்கொண்டிருக்கிறார்.  ஒவ்வொருவரிடமும் பொறுமையாக விபரம் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து
உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவிடுகிறார். துறை அதிகாரி அங்கு இல்லை என்றால் அந்தத் துறை அதிகாரியை தொலைபேசியிலோ கைபேசியிலோ அழைத்து இந்த மனுவின் மீது இத்தனை நாளைக்குள் இன்னபடி நடவடிக்கை எடுத்துவிட்டு என்னிடம் அந்த நடவடிக்கை குறித்து தகவல் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக் கிறார்.

பொதுவாக ஆட்சியர்கள் மனுவை வாங்கியதும் மனுவின் ஓரத்தில் ஒரு குறிப்பை எழுதி சுருக்கொப்பமிட்டு அருகிலுள்ள ஒரு அதிகாரியிடம் கொடுத்துவிடுவார்கள்.

அந்த மனுவை அவர் அருகிலுள்ள அலுவலரிடம் கொடுத்து பதிவேட்டில் மனுவின் தன்மை குறித்து பதிவு செய்து அதற்கு ஒரு கடித எண் குறிப்பிட்டு தொடர்புடைய‌ அலுவலருக்கு மேலதிக நடவடிக்கைக்கு அனுப்பிவிடுவார். மனுதாரரைப் பார்த்து
"நீங்க போகலாம். உங்க மனுவின் மீது தாசில்தார் நடவடிக்கை எடுத்து உங்களுக்கு பட்டாக் கொடுத்துவிடுவார் என்று சொல்லி அனுப்பிவிடுவதுதான் வழக்கம்.

ஆனால் ஆட்சியர் சகாயம் அப்படிச் செய்யாமல் முதியோர் உதவித்தொகையா? ஏம்மா? உங்களுக்கு கெடைக்கலியா? என்பார். அய்யா, தாசில்தாரிடம் எத்தனையோதரம் மனுக்கொடுத்துட்டேன்.  பிஞ்சனே (பென்சன் என்ற ஆங்கிலப் பதம் நம்மவர்கள் நாவில்
பிஞ்சனாகி தமிங்கிலமாகி உதிர்கிறது.) கெடைக்கலிங்கய்யா என்பார்.

"அது எந்தத் தாசில்தார்..இங்க வந்திருக்காரா? இல்லையா? உதவியாளரை அழைத்து அந்தத் தாசில்தாரை என்னிடம் போன்ல பேசச் சொல்லுங்க.."என்பார்.  உதவியாளர் தாசில்தார் போன் லயன்ல இருக்கார் என்று வாங்கிக் கொடுப்பார்.  அந்தத் தாசில்தாரிடம் அந்த மனுதாரருக்கு ஏன் முதியோர் உதவித்தொகை கொடுக்கலை என்று விளக்கம் கேட்பார்; அதன் பின் மறுபடியும் இப்ப அனுப்புறேன்...மூனே நாள்ல முதியோர் உதவித் தொகையை
கொடுத்துட்டு எனக்குத் தகவல் சொல்லுங்க..."என்பார்.

இப்படி ஒவ்வொரு மனுவையும் சிரத்தையோடு கவனித்து பரிவோடு அனுப்புவதால் மனுக்கொடுக்கும் கூட்டம் ஆமை வேகத்தில் நகரும்.  மனுக்கொடுக்கும் கூட்டம் குறையாமல் வளர்ந்துகொண்டு
தானிருக்கும். இதுதான் வழக்கமாக ஆட்சியர் சகாயத்தின் மனுநீதி நாளில் நடக்கும் நிகழ்வாக‌ இருக்கும்.

அப்படியான ஒருநாளில்....மனுக்கொடுப்பவர்கள் வரிசையில் ஒரு இளம்பெண்  கையில் மனுவேதும் இல்லாமல் அவரது
முறைக்காக நகர்ந்து வந்து ஆட்சியர் சகாயம் முன் நிற்கிறார். 

"எங்கம்மா உன் மனு?"

"அய்யா எனக்கு ஒரு உதவி வேணுங்கய்யா"

"என்னம்மா உதவி வேணும்"

"எனக்கு ஒரு ஒதவி வேணுங்கய்யா."

"என்ன படிச்சிருக்கீங்க?"

"அய்யா, எனக்கு பார்வை கெடையாதுங்கய்யா;படிப்பும் கெடையாது. எங்க‌அப்பா ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகிங்கய்யா. பாண்டமங்கலம் தியாகி தர்மலிங்கம் பிள்ளைங்க அய்யா. அவரோட மகள் உமாராணி, நான். அவருக்கு தியாகிக்கு கெடைக்க‌ வேண்டிய பென்சன் கூட கெடைக்கலீங்கய்யா. அது கெடைச்சாக்கூட புண்ணியமா இருக்குங்க அய்யா."

அந்தப் பெண் சொன்ன பிறகுதான் ஆட்சியர் சகாயத்துக்கு அந்த இளம்பெண்ணின் சூழல் புரிகிறது. இந்த நாட்டில் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின் பிள்ளைக்கா இந்த நிலை. ஒரு கணம் திகைத்துப் போகிறார். நாடு சுதந்திரம்  வாங்கி இத்தனை
ஆண்டுகளுக்குப் பின்னும் கூட இந்த நாட்டுக்காக போராடிய ஒரு தியாகியின் குடும்பம் எத்தகைய அவல நிலையில் இருக்கிறது. மனம் கலங்குகிறார்.

அதிகாரிகளை வரவழைத்து அங்கேயே ஆலோசிக்கிறார், சகாயம்.  வழக்கம் போல‌ அதிகாரிகள் சொல்லும் பதிலைச் சொல்லுகிறார்கள். "புதுசா தியாகிகள் பென்சன் கொடுக்க இயலாது என்பதை நயந்தும் பயந்தும் பவ்யமாகச் சொல்லுகிறார்கள்.

தாசில்தாரை அழைத்து தியாகியின் வீட்டுக்குப் போய் விசாரிச்சு எனக்கு ஒரு அறிக்கையை ரெண்டு நாளைக்குள் குடுங்க என்கிறார், சகாயம்.

அறிக்கை வந்ததும், பார்க்கிறார். 

இந்தத் தியாகியின் மனுவைப் பரிசீலித்ததில், அவருடன் சிறையில் இருந்த மற்றொரு  தியாகி, சிறையில் தன்னுடன் இருந்ததாகச் சான்று அளித்துள்ளதை ஏற்று அரசு தனி நேர்வாகக் கருதி தியாகிக்குரிய உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் என்ற அளவில் பரிந்துரைக்கிறேன்," என்று எழுதிக் கையொப்பமிட்டு அரசுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்புகிறார்.  அத்தோடு தன் பணி முடிந்துவிட்டது என்று கருதாமல் தொடர்புடைய‌
துறையின் மேலதிகாரியிடமும் தொடர்புகொண்டு அம்மனுவின் மீது உடனடியான‌ நடவடிக்கை கோருகிறார்.

ஆட்சியர் சகாயத்தின் தொடர் முயற்சியின் விளைவால் அந்தத் தியாகியின் குடும்பத்துக்கு பென்சனும் வாங்கிக்கொடுக்கிறார்.

தியாகியின் மகள் ஆட்சியர் சகாயத்தை பென்சன் கிடைத்ததும் ஆட்சியர் அலுவலகம் சென்று சந்திக்கிறார்.

அன்று.....அய்யா, உதவி செய்யுங்கய்யா..... என்று வந்த அந்தப் பெண் இப்போது சகாயத்தின் முன் நிற்கிறார். 

தியாகி தர்மலிங்கம் மகள்  உமாராணி, அமைதியாகச் சொல்கிறார்.

"அண்ணே....இத்தனை நாளும் எனக்கு எதையும் பாக்க முடியலைன்னு வருத்தப்பட்டதில்லை இப்ப எனக்கு வருத்தமாக இருக்கு.  அண்ணே உங்களைப் பாக்கனும்ண்ணே..."

திங்கள், 17 மார்ச், 2014

9. நம்பிக்கை இல்லம்.....

கலெக்டர் சகாயம் மக்கள் குறை கேட்க கிராமம் தோறும் செல்வது வழக்கம் அவ்வாறு கொல்லிமலை, சேளூர் நாடு கிராமத்திற்கு சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குட்டியாண்டி சின்னையன் என்பவர் தனது வறுமை காரணமாக தனது ஊனமுற்ற மகனை படிக்க வைக்க இயலவில்லை என கண்ணீர்விட்டார். அவரது பிரச்சனையை முழுமையாக கேட்டறிந்த கலெக்டர் சகாயம், உடனடியாக அவரது மகன் மணிகண்டனை நம்பிக்கை இல்லத்தில் சேர்த்தார்.

இதேபோல் பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஊஞ்சல்பாளையம் கிராமத்திற்கு சென்ற போது கணவனை இழந்த சிங்காரி என்ற பெண் வறுமை காரணமாக தனது இரண்டு பெண்குழந்தைகளையும் வைத்து பராமரிக்க இயலவில்லை எனக் கூற அவரது ஒரு பெண் குழந்தையான வினோதினியை நம்பிக்கை இல்லத்தில் சேர்த்தார்.

இதேபோல் தாய் தந்தையரை இழந்த பவானி என்ற கல்லூரி மாணவியும், நாமகிரிப்பேட்டை பகுதியில் வீதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மனநிலை சற்றே பாதிப்படைந்த அருண்குமார் என்ற சிறுவனும் நம்பிக்கை இல்லம் வந்தனர். இன்று நம்பிக்கை இல்லத்தில் 6 குழந்தைகள் உள்ளனர். இவர்களைப் பராமரிக்க கணவனை இழந்த விதவையான செல்லம்மாள்(52) நியமிக்கப்பட்டுள்ளார்.கல்லூரி நேரம் போக இவருக்கு உறுதுணையாக பவானியும் குழந்தைகளை பராமரித்து வருகிறார்.

இந்த இல்லத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு தமிழ்வழி கல்வி, ஆங்கிலம், தற்காப்பு கலை, தமிழர் பண்பாட்டுக் கலைகள் கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இல்லத்திற்கு ஈகை உள்ளம் கொண்டவர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்,

இதுபோன்ற குழந்தைகள் பெற்றோர் மற்றும் சொந்தபந்தங்களின் அரவணைப்பு இல்லாததால், தங்கள் மீது அன்பைப் பொழியும் உள்ளங்களைத் தேடுவார்கள். பணமில்லாவிட்டாலும் மனமுள்ளவர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அந்தக் குழந்தைகளின் ஓய்வுப்பொழுதில் அவர்களின் நேரத்தைச் செலவிட்டு தங்கள் அன்பைக்கொடுக்கலாம். அந்தக் குழந்தைகளுக்கும் நம் மீது அன்பு காட்ட எவ்வள‌வு பேர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமல்லவா?

அந்த சந்தோசம் அவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்பது அவர்களுக்காக பணம் காசைக் கொடுப்பவர்களைவிட தங்கள் அன்பை பகிர்ந்துகொடுப்பவர்களே அதிகம் தேவை"

நம்பிக்கை  இல்லத்திற்கு பல்வேறு உதவிகளை வழங்கிய நாமக்கல்லைச் சேர்ந்த பஸ் அதிபர் தயாளன் சொல்கிறார்:- கலெக்டர் சகாயம் நாமக்கல் மாவட்டத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்.. அனைத்து அதிகாரிகளுக்கும் முன் மாதிரியான அவர் விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கு செய்யும் தொண்டு அளப்பரியது. எங்களது பாப்பு ரெட்டியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் ஆதரவற்ற பெண்களின் மத்தியில் அவர் பேசியது அந்த பெண்களின் தாழ்வு மனப்பான்மையை போக்கி அவர்களை இன்று செழுமைப்படுத்தி உள்ளது.

தூய்மையான எண்ணம் கொண்ட அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றினை தொடங்கப்போவதாக நானும் எனது நண்பர் விஜயகுமாரும் கேள்விப்பட்டோம். உதவ சென்றபோது ரொக்கமாக பெற மறுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக நாங்கள் சமையல் கூடத்திற்கான பொருட்களை வழங்கினோம்.இன்னும் அந்த இல்லத்திற்காகவும் அந்த குழந்தைகளின் நலனிற்காகவும் பல்வேறு உதவிகளை வழங்க தயாராக எப்போதுமே உள்ளோம் என்கிறார்.

இப்போது சகாயம் அங்கு இல்லையென்றாலும் அவரின் நல்லெண்ணத்தால் உருவான நம்பிக்கை இல்லம் நல்லெண்ணம் உள்ள பலரால் உதவிக்கரம் நீட்டப்பட்டு நடந்து வருகிறது.  சகாயம் இன்னும் கொஞ்சகாலம்அங்கு ஆட்சியராக இருந்திருந்தால் நம்பிக்கை இல்லத்துக்கு ஒரு நிரந்தரமான கட்டிடம் உருவாகியிருக்கும். நம்பிக்கை இல்லம் நம்பிக்கையோடு எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் இல்லாமல் அமைய கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்.  

சகாயம்,நாமக்கல் செல்லும்போதெல்லாம் நம்பிக்கை இல்லத்தை பார்க்காமல் திரும்புவதில்லை. இந்த நம்பிக்கை இல்லம் தாராள மனதுடையவர்களின் கண்பார்வை பட்டால் அது பெரும் உதவியாக இருக்கும்; இன்னும் நிரந்தரமாகவும் நல்ல பல திட்டங்களுடன் நம்பிக்கை இல்லத்தைச் செயற்படுத்துவது குறித்தே பல நேரங்களில் சிந்திக்கிறார், சகாயம்.

8. "கிராமத் தங்கல்"

இதற்கு எடுத்துக்காட்டாக நாமே கிராமங்களில் போய் தங்குவது வாரத்திலோ மாதத்திலோஒருநாள் என்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினார்.


எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இரவு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வாகன ஓட்டியை மட்டும் கூட்டிக்கொண்டு தன் உதவியாளர்களைக்கூட யாரையும்அழைத்துக்கொள்ளாமல் திடீர் என்று ஒரு கிராமத்துக்குப் போவார். அங்கு போனபின்தான் கிராமத்துக்கு கலெக்டர் வந்த விசயமே தெரியும். அந்த ஊரின் மையப்பகுதியில் ஒரு கட்டிலைக் கொண்டுவரச் சொல்லி போடச் சொல்லி உட்கார்ந்து கொள்வார்,சகாயம்.


ஊர் பெரியவர்கள் கலெக்டர் வந்ததை அறிந்து ஒவ்வொருவராக வந்து பார்ப்பது,
என்று கொஞ்ச நேரத்தில் ஊரே அங்கு கூடிவிடும்.  சொல்லுங்க ஒங்க ஊர்ல என்ன‌பிரச்னையெல்லாம் இருக்கு? உடனடியா செய்ய வேண்டியது என்ன?  குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு பிரச்னைகள் குறித்துச்சொன்ன நாலைந்துபேர்களை மட்டும் இருக்கச் சொல்லுவார்,சகாயம்.


அவர்களிடமிருந்து மேலும் விபரமாக பிரச்னைகளின் ஆழம் குறித்து அறிந்துகொண்டுஅங்குள்ள பள்ளிக்கூடம் அல்லது காற்றோட்டமாக அந்தக் கட்டிலிலேயே வீட்டிலிருந்துகொண்டு வந்த போர்வை தலையணை சகிதமாக இரவைக் கழிப்பது வழக்கம்.  தூக்கம்வராத கொசுக்கடி இரவில் விடியவிடிய புரண்டுகொண்டே இருந்து காலையில்அந்தக் கிராமத்து பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய உயர் அதிகாரிகளை அங்கேயேவரவழைத்து உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்னைகளை அங்கேயே அப்போதேதீர்த்துத் திரும்புவதுதான் சகாயம் ஸ்பெசல் "கிராமத் தங்கல்" ஆகும்.


கிராம மக்கள் பிரச்னைகள் இல்லாத ஊர் எதாவது இருக்கிறதா,என்ன?  சாலை,குடிநீர்வசதி,தெருவிளக்கு,மேல் நிலைக் குடிநீர் தொட்டி,அடிபைப், சுடுகாட்டுப் பிரச்னை, கழிவு நீர் வெளியேறாமல் தேங்கிக் கிடக்கும் சாக்கடை, கிராமத்துக்கு வரும் ஒரு பேருந்தும் வருவதில்லை, பள்ளி கட்டிடம் மராமத்து செய்யக்கோருதல் இப்படி பட்டியலுக்குள் அடங்காத பல பிரச்னைகள் அவர்களைச் சுற்றி எப்போதும் நெருக்கிக்கொண்டே இருக்கும்.


கிராமம் சார்ந்த அரசின் நலத்திட்டங்கள் கிராமத்துக்கு சென்றடைந்ததா என்பதையெல்லாம்வெகு சிரத்தையோடு விசாரிப்பார்.  அரசின் நலத்திட்டங்கள் நூறுவிழுக்காடு நிறைவேற்றப்பட‌வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்படுவார். உடனே ஆளுங்கட்சிச் சாயம் அவர் மீதுபூசப்படுவதும் நடக்கும்; இதையெல்லாம் சகாயம் கண்டுகொள்வதில்லை. என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று அதில் மட்டுமே கவனம் செலுத்துவார்.


எத்தனையோ தடவை பென்சன் கேட்டு அலையோ அலைன்னு அலைந்ததை மவராசன்எங்க கிராமத்துக்கே வந்து குடுத்திட்டுப்போன தெய்வமுங்க அவர்! பட்டா மாத்திக்கேட்டுஅலைஞ்சு செருப்புத் தேய்ஞ்சதுதான் மிச்சம்ன்னு இருந்தேன்.  தாசில்தார இங்கயே வரச்சொல்லி குடுஙக பட்டாவைன்னு குடுத்தார் கலெக்டர்!  தண்ணி பைப்புல காத்துதான்வந்துகிட்டு இருந்துச்சு. அவரு வந்துட்டுப் போனார் பின்னாடியே வந்து போரு போட்டுஅடி பைப்பு போட்டுக் குடுக்கவச்சாருங்க!


இப்படியான வாழ்த்தொலிகள் சகாயத்தின் கிராமத்தங்கலுக்குப் பிறகு கிராமங்களில்கேட்கத் துவங்கியது. இதனால் எங்க கிராமத்துக்கு கலெக்டர் வரமாட்டாரா? எங்க பிரச்னையத்தீக்கமாட்டாரா? என்ற எதிர்பார்ப்புக்கள் கிராமங்களில் நிலவ வைத்துவிட்டார் சகாயம்!

கிராம குறை தீர் மன்றங்கள்.....


இப்படிக் கிராமங்களில் தங்கிய பிறகு பின்னிரவு தாண்டியும் சில பெரிசுகள் பேசிக்கொண்டதில்சின்னச் சின்ன பிரச்னைகள்கூட வழக்குகளாகி நீதிமன்றப் படிக்கட்டுகளுக்கு நடந்து நடந்துநேரம், பொருள் விரயம் செய்யும் போக்கைக் கேட்டு என்ன செய்யலாம்? என்ற‌ சிந்தனைஎழுந்தது.  அதன் விளைவாக "கிராம குறை தீர் மன்றங்கள்" உருவானது.


காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த கடிதம் ஒன்றை ஆட்சியர் சகாயம்படிக்கிறார்.  அந்தக் கடிதத்திலிருந்த சம்பவம் அவர் மாவட்ட வருவாய் அதிகாரியாக காஞ்சிபுரத்தில் இருக்கும் போது நடந்தது என்பது அவர் மனக் கண் முன் விரிகிறது.


24.11.03 காலை பத்துமணி....காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம்.....பொதுமக்களும், அலுவலர்களுமாக பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது... அவரவர் பணிகளில் ஆழ்ந்திருந்த நேரம்..... அம்மா...!....ஐயோ......! அம்மா...! என ஒரு கூக்குரல் கலெக்டர் அலுவலகத்தையே உலுக்குகிறது.. அனைவரும்  அலுவலகத்தின் முன் பகுதிக்கு ஓடுகிறார்கள்... வாசலில் ஒரு பெண்....... தீயில் எரிந்து கொண்டிருக்கிறார்... அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்.. துடித்துக் கொண்டு கீழே விழுகிறார் ....கொஞ்சம்... கொஞ்சமாக அவரது ஆன்மா அடங்குகிறது.... நீதி செத்ததால் மதுரையையே எரித்த கண்ணகி போல நீதிக்காக தன் உயிரையே மாய்த்து கொண்டது ஒரு ஜீவன்.....


அப்போதைய மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனு எழுதி வைத்துவிட்டு அந்தப் பெண் தன் உயிரை விட்ட சம்பவத்தை
நாமக்கல் மாவட்ட ஆட்சியரான பின் எண்ணிப்பார்க்கிறார்.


சுந்தரமூர்த்தி-பிரேமா கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர்.தங்களுக்குள் வளர்த்த காதலால் இருவருமே போராட்டத்தையே வாழ்க்கையாக்கி கொண்டிருந்தனர். தங்களது கலப்பு திருமணத்தால் எழுந்த எதிர்ப்பு காரணமாக இருவரும் சொந்த பந்தங்களை உதறிவிட்டு கண்காணாத தேசமாக காஞ்சிபுரம் வந்தனர். வாழ வழி கிடைக்க கீழம்பி கிராமத்தையே தங்களது பூர்வீகமாக்கிக் கொண்டனர்.  25.3.2000 த்தில் ஆண் மகவை பெற்றனர். சுந்தரமூர்த்தியும் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அதே கிராமத்தில் கொஞ்சம் நிலங்களை வாங்கி வீடும் கட்டினார்.. இந்நிலையில் 21.08.2001 ல் அழகான பெண் மகவை பெற்றனர்.


இந்நிலையில் சுந்தரமூர்த்தியின் வீடு இருந்த பகுதியில் மரங்கள் அடர்ந்த தோட்டப்பகுதி இருந்தது. இந்த மறைவான பகுதி நாளடைவில் சமூகவீரோதிகளின் கூடாரமானது. இதனால் அருகில் இருந்த சுந்தரமூர்த்தியின் குடும்பத்திற்கு பல்வேறு வகைகளில் இடையூறு வந்தது.

சமூக விரோதிகளிடம் அன்பாகவும் நயந்தும் சுந்தரமூர்த்தி  சொல்லிப் பார்த்தார்.  கேட்கவில்லை. இதனை சகித்து கொண்டு வாழ்க்கையை ஓட்டிய சுந்தரமூர்த்தியின் குடும்பத்திற்கு மேலும் சிக்கல்கள் தொடங்கின.  குடிபோதையில் கயவர்கள் பிரேமாவின் கையைப் பிடித்து இழுக்கும் அளவிற்கு போனது.   கிளர்ந்து எழுந்தார் பிரேமா. உள்ளூர் காவல் நிலையம் சென்றார். நியாயம் கிடைக்க வில்லை. டிஎஸ்பியிடம் சென்றார் நியாயம் கிடைக்கவில்லை.எஸ்பியிடம் முறையிட்டார். ஒன்றுமே நடக்கவில்லை.


இறுதியில் கிடைத்தது..பிரேமாவிற்கு வேசிப் பட்டம். நொந்து போனார் பிரேமா; மனம் வெதும்பிய அவர் தனது கணவனிடம் கூட கூறாமல் கலெக்டர் அலுவலகம் சென்றார். தனது மனக்குமுறல்களை தனக்கு நேர்ந்த அநீதியை விரிவாக .  எழுதி வைத்து விட்டு  தனது கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் நடத்தினாள்  இந்த சீதை. ஆனால் காக்கத்தான் எந்த கடவுளும் வரவில்லை.


பிரேமாவின் மறைவிற்கு பிறகு மனதொடிந்த சுந்தரமூர்த்தி தனது இரு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு தனது சொத்துக்களை விட்டு விட்டு...... தனது நண்பர்களைத் தேடி கிளம்பினார். நண்பர் பொன்னுசாமி ஆதரவு கரம் நீட்டினார்.. பற்றிக் கொண்ட சுந்தரமூர்த்தி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பக்கம் உள்ள பச்சுடையாம்பட்டியில் குடியேறி தனது குழந்தைகளுக்காக வாழத் தொடங்கினார். தன்னிடம் இருந்த பாடல் திறமையால் தனது வாழ்க்கையை நகர்த்தினார்.


கடுமையான உழைப்பும், பிரேமாவின் இழப்பும் சுந்தரமூர்த்தியை வெகுவாகப் பாதிக்க... கடந்த 15.12.2008 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரும் மரணமடைந்தார்.


இதற்கிடையே பிரேமாவின் சாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனித உரிமைகள் அமைப்பு நண்பர்கள் பலர் போராடிக் கொண்டிருந்தனர்.இந்த போராட்டத்தின் பலனாக பிரேமாவின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.ஒரு லட்சத்தினை அரசு அறிவித்தது. இந்த நிவாரணத் தொகையை வழங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பிரேமாவின் குடும்பத்தை தேடியது....


அந்த குடும்பம் நாமக்கல் அருகே இருப்பதை அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. இந்த கடிதத்தை படித்த கலெக்டர் சகாயம் உடனடியாக அந்தக் குடும்பத்தை வரவழைத்தார். சுந்தரமூர்த்தியின் நண்பரான பொன்னுசாமி அநாதையாகிவிட்ட அந்த இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்.அவர்களின் கதையைக் கேட்ட கலெக்டர் சகாயம், தான் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.வோவாக இருந்தபோது நடைபெற்ற சம்பவம் தான் இது என்பதை உறுதிபடுத்திக் கொண்டார். அந்த சம்பவத்தை நேரில் பார்த்ததன் பாதிப்பு இன்றும் அவரது மனதில் இருந்ததால் தாய் தந்தை இல்லாத சூழலில் அவர்களை பெற்றோர் இல்லை என்ற குறை தெரியாமல் வளர என்ன செய்வது என்று சிந்தித்தார்.


நிவாரணத் தொகை ஒரு லட்சத்தை குழந்தைகள் நந்தா(எ)நாராயணதாசன், பாரதி(எ) சத்ய சூரிய பாரதிக்கு கிடைக்க ஏற்பாடு செய்ததுடன் அந்த தொகையை அவர்களின் பேரில் வருங்கால வைப்பு நிதியாகவும் டெப்பாஸிட் செய்ய ஏற்பாடு செய்தார். மேலும் பொன்னுசாமியிடம் அந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கவும் அறிவுறுத்தினார்.இந்நிலையில் கீழம்பி கிராமத்திலிருந்து சுந்தரமூர்த்தியின் நண்பர்கள் என கூறிக் கொண்டு சிலர் அந்த குழந்தைகளை தாங்கள் வளர்ப்பதாக கூறி கலெக்டரை சந்தித்தினர். அவர்களிடம் பேசிய கலெக்டர் சகாயம், வந்தவர்களின் மனதில் உண்மை இல்லை என்பதை அறிந்து குழந்தைகளை அனுப்ப மறுத்ததுடன். கீழம்பியில் உள்ள சுந்தரமூர்த்தியின் சொத்துக்களை பாதுகாக்கவும் ஏற்பாடு செய்தார்.


பொன்னுசாமியின் அரவணைப்பில் குழந்தைகள் வளர்ந்து வந்த நிலையில் பொன்னுசாமியும் வயோதிகம் காரணமாக இயற்கை எய்தினார். ஈகைக் குணம் இருந்தும் வறுமை காரணமாக  பொன்னுசாமியின் மகனால் குழந்தைகளைப் பராமரிக்க இயலவில்லை. கலெக்டர் சகாயத்தினை நேரில் சந்தித்த அவர் தனது நிலைமையை கூற... கலெக்டர் அந்த குழந்தைகளைப் பராமரிக்கும்படி ஒரு காப்பகத்துக்கு அனுப்பினார்.


திடீரென்று வேறு அலுவலாகச் சென்ற கலெக்டர் சகாயம்,குழந்தைகளை விட்டிருந்த காப்பகத்துக்கு முன்னறிவிப்பின்றிச் சென்றபோது குழந்தைகள் அங்கு இல்லாததைக் கண்டு திடுக்கிட்டார். குழந்தைகள தேடிப்பிடித்து விசாரித்ததில்,காப்பகத்துச் சூழல் பிடிக்காமல் ஓடிப்போனதாக தெரிவித்திருக்கின்றனர்.   தாம் தவறான இடத்தில் விட்டுவிட்டோமே என்று சகாயம் வருந்தினார்.


அப்போது அவர் மனதில் ஒரு புதிய எண்ணம் தோன்றியது.. இதனை தனது சக அலுவலர்களிடம் கூற உடனடியாக ஒரு குழந்தைகள் காப்பகம் உருவானது. அதற்கு கலெக்டர்,சகாயம்,  "நம்பிக்கை இல்லம்" என்ற பெயரும் சூட்டினார்.


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பொரசபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான  வாடகை வீட்டில் இந்த இல்லம் தொடங்கப்பட்டது அந்த இரு குழந்தைகளையும் இந்த இல்லத்தில் பராமரிக்க ஏற்பாடு செய்தார். மேலும் தான் அரசு அலுவலர் என்ற காரணத்தாலும் தான் வேறு ஊருக்கு  மாற்றப்படலாம் என்பதாலும் தன்னால் நேரடியாக இந்த இல்லத்தை கண்காணிக்க முடியாது என்பதாலும் ஒரு டிரஸ்ட் உருவாக்க ஏற்பாடு செய்ததுடன் இதற்காக நேர்மையாகவும், தொண்டு புரியும் மனப்பான்மையு முள்ள‌ நாமக்கல்லை சேர்ந்த சிலரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார். 

மனோகரன் கந்தசாமி மற்றும் வழக்கறிஞர் காயத்திரி தேவி என்பவரையும் நிர்வாக அறங்காவலர்களாகக் கொண்ட‌ நம்பிக்கை இல்லத்தினை கடந்த 5.12.2009 அன்று முறைப்படி பதிவு செய்யப்பட்டது ( பதிவு எண்.1270/2009). அந்த நம்பிக்கை இல்லத்தில் குழந்தைகளைக் கவனிக்க தாயுள்ளத்தோடு ஒருவரை நியமிக்க ஆவன செய்தார். தன் சொந்தப்பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை முதல் நிதியாக கலெக்டர் சகாயம் வழங்கினார்.

இப்படி உருவான நம்பிக்கை இல்லத்துக்கு அரசு அலுவலர்கள் மாதம் தோறும் ஒரு சிறு தொகையை தங்கள் பங்களிப்பாக மனமுவந்து கொடுக்க முன்வந்தனர்.

ஞாயிறு, 16 மார்ச், 2014

7. கோடிகள் எங்கோ அடைக்கலமாக.....

கோடிகள் எங்கோ அடைக்கலமாக.....

பரங்கி மலை வருவாய் வட்ட எல்லையில் அரசு நிலத்தை மாத்யூஸ் என்பவர் வளைத்துப் போட்டிருந்தார்; அந்த இடத்தை,
ரூ.25 இலட்சங்கள் என விலை நிர்ணயம் செய்து அசைன்மெண்ட் பட்டா போட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்தச்
சிபாரிசு! மாவட்ட ஆட்சியர் சுகுமாறன் அந்தக் கோப்பை மாவட்ட வருவாய் அதிகாரியான சகாயத்துக்கு அனுப்பி ஆவன‌
செய்யக் கேட்டிருந்தார்.  அதிகாரி சகாயம் உயர் அதிகாரி சொல்லிவிட்டாரே என்று கண்ணை மூடிக்கொண்டு கையொப்பமிட்டு
காரியத்தை முடித்துகொடுப்பவர் இல்லையே!

பரங்கி மலையில் குறிப்பிட்ட இடத்தைப் போய் ஆய்வு செய்தார். ஆய்வு செய்த அதிகாரியான சகாயம் அதிர்ந்துபோனார்.
நாற்பது இலட்சங்கள் என்றால் கூட பரவாயில்லை! நாலுகோடி பெறுமானமுள்ள இடம் என்பதை ஆய்வில் கண்டறிந்தார்.

கோடிகள் எங்கோ அடைக்கலமாக அரசு நிலத்தை முறைகேடாகவும் சட்டத்துக்கு புறம்பாகவும் அனுபவிப்பவருக்கு பட்டாப்
போட்டுக்கொடுக்க சகாயத்தின் நேர்மை அணுவளவும் இடம் கொடுக்கவில்லை.  கோடிக் கணக்கில் அந்த இடத்தின் மதிப்பீடு
இருக்கும்போது தம்மால் 25 இலட்சங்கள் அரசு விலை என்று நிர்ணயித்து பட்டா வழங்க இயலாது என்று திட்டவட்டமாக எழுதி
கோப்பைத் திருப்பி அனுப்பிவிட்டார், சகாயம். இதனால் முதல்வரின் கூடுதல் செயலர் இராசமாணிக்கத்தின் கடும் கோபத்துக்கு
ஆளானார் சகாயம்!

எல் அண்ட் டி என்ற பிரபல நிறுவனம்.  இந்த நிறுவனம் சுங்குவார் சத்திரத்தின் அருகேயுள்ள நீர்வடு என்ற கிரமத்தில் இருந்த‌
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்திருந்தது.  சகாயம், நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்த இடத்தைப் பார்வையிட்டார். எல் அண்ட் டி
நிறுவனம் சகாயத்தை மிரட்டோ மிரட்டு என்று மிரட்டியது. சகாயத்தை இந்த இடத்திலிருந்து தூக்கிக் காட்டுகிறோம் என்று சவால் விட்டது; எதற்கும் கவலை கொள்ளாத சகாயம் இதற்கெல்லாமா கவலைப்படுவார்.  இந்த நிறுவனம் ஆக்கிரமித்திருந்த  நிலத்தை ஆய்வு மேற்கொண்டு அந்த நிறுவனத்திடமிருந்து 1.5ஏக்கர் நிலத்தை நிறுவனப் பிடியிலிருந்து மீட்டார், சகாயம்.

பத்தாயிரம் பட்டாக்கள் பைசா செலவில்லாமல்.....

நீண்ட வருடங்களாக அரசு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வசித்துவரும் ஏழை மற்றும் நடுத்தரவாசிகளுக்கு இலவசப் பட்டா
வழங்கலாம் என்று அரசு அறிவித்திருந்த திட்டத்தில் காசு பார்க்க நினைத்த அதிகாரிகள் குறித்த தகவல் சகாயத்தின் காதில்
விழுந்தது. 

ஏழை எளியவர்களுக்கு பைசா செலவில்லாமல் பட்டா சென்றடைய வேண்டும் எண்ணிய சகாயம் தானே முன்னின்று
கையெழுத்திட்டு பத்தாயிரம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பைசா செலவில்லாமல் இலவச பட்டாக்களை வழங்கினார்.
இலவச பட்டா வழங்குவதில் காசு பார்க்க நினைத்த அலுவலர்களின் நினைப்பில் "மண்"விழக் காரணமானார், சகாயம்! ஆனால்
பத்தாயிரம் ஏழை எளிய குடும்பங்கள் இதயம் குளிர வாழ்த்தினார்கள் என்ற பெருமை சகாயத்துக்கே என்பது சகாயம் மாற்றப்பட்ட‌
அந்த நாளில் தெரிந்தது!

இப்படி அடிக்கடி கிராமப் பக்கங்களுக்கு போகும்போது அங்குள்ள கிராமத்தினரைச் சந்தித்துகுறைகள் இருக்கிறதா? அரசு அதிகாரிகள் வருகிறார்களா? பிரச்னைகள் ஏதும் உள்ளதா?என்றெல்லாம் விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார், சகாயம்.

கிராமங்களில் தங்கி இருக்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் தங்காததால்கிராமங்களில் சில பிரச்னைகள் விசுவரூபமெடுத்துவிடுகிறது.  அதனைத் தீர்க்கவேண்டிய‌ உடனடி அலுவலராக கிராம நிர்வாக அலுவலர்கள் கருதப்படக்கூடியவர்கள்.  பள்ளிப்பிள்ளைகளுக்குசாதிச் சான்று, வருமானச் சான்று வேண்டுமானால் அதற்கு இவர்கள் முதலில் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தால்தான் வட்டாட்சியர் அலுவலகத்துக்கே போகமுடியும்.

விவசாயிகள்வங்கிக்கடன் வேண்டும் என்று போகும்போது அவர்கள் பட்டா,சிட்டா என்று பலதேவைகள்ஏற்படும்போது அதனைக் கொடுக்கிற பொறுப்பு இவர்களுக்கு உண்டு. திடீர் என ஒரு வழக்கில்பிணை பெற வேண்டிய சூழல் என்றால் அதற்கும் இவரே சான்று அளிக்க வேண்டிய‌அலுவலராக இருக்கிறார்.  இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் உள்ளவர்கிராமத்தில் தங்கி இருக்கவேண்டும் என்பது அரசின் உத்திரவும் கூட! ஆனால் இவர்கள்கிராமங்களில் வசிப்பதில்லை என்பதை சகாயம் கிராமங்களுக்குச் சென்ற போது பொதுமக்கள் அளிக்கின்ற புகாரிலிருந்து தெரிந்து கொண்டார்.

இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்கிப் பணிபுரியவேண்டும்என்பதில் கண்டிப்பாக இருந்தார், சகாயம்.

ஒரு நாள் அதிகாலையில் திண்டுக்கல்லில் கலெக்டாராக இருந்தவரிடமிருந்து ஒருதொலைபேசி அழைப்பு சகாயத்துக்கு வருகிறது.  தனது உறவினர்கள் சென்ற வாகனம்விபத்துக்குள்ளாகி நாமக்கல் அருகே மூன்று நான்கு பேர்கள் அந்த இடத்திலேயே மரணமடைந்துவிட்டதாகவும், அதற்காக தாம் அங்கு வருவதாகச் சொல்கிறார்.

நடந்த விபத்து,முதல் நாள் நள்ளிரவில் நடந்தது. அந்தக்கிராமத்தில் கிராமநிர்வாக‌ அலுவலர் தங்கியிருந்தால் உடனே இந்த விபத்து குறித்து ஆட்சியருக்குத் தெரிய‌வந்திருக்கும். அவர் அங்கு தங்காததால் அடுத்த மாவட்ட ஆட்சியர் கூப்பிட்டுச்சொன்ன பிறகே அப்படி ஒரு சம்பவம் நடந்தது தனக்குத் தெரிய வருகிறதுஎன்பதில் சகாயம் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களில் தங்கி பரிபாலனம்செய்வதில்லை என்ற அதிருப்தியில் இருந்தார், சகாயம்.


6. "எனக்குத்தான பிரச்னை வரும்...."

24-11-1999 ல் பெப்சிக்கே......பெப்பே....!

அன்று மனுக் கொடுக்க வந்தவர்களில் ஒருவர் வித்தியாசமான மனு ஒன்றைக் கொடுக்கிறார். மனுவுடன் ஒரு பாட்டிலையும் சேர்த்துக்
கொடுக்கிறார்.  பெப்சி பாட்டிலை நீங்க வச்சுக்கங்க. மனுவை மட்டும் அய்யாட்ட கொடுங்க என்கிறார் சகாயத்தின் உதவியாளர். அந்த பாட்டில்தான் பிரச்னை என்கிறார், மனுகொடுக்க வந்தவர்.  

மிக மோசமான அழுக்குப் படலம் ஒன்று இந்த பெப்சி பாட்டிலில் இருக்கிறது என்று மனுக் கொடுக்க வந்த சம்பத் முதலியார் பெப்சி பாட்டிலைக் கொடுக்கிறார்.

கடையில் வாங்கிய பெப்சி பாட்டிலில் அழுக்குப் படலம் உறைந்து கிடக்கிறது.  பார்க்கிறார், சகாயம்.  நிறுவனம் சீலிட்ட, இன்னும் திறக்கப்படாத பெப்சி புட்டியினுள் மூக்குச் சளி போல ஒரு அழுக்குப்படலம் அசைந்தாடுகிறது. என்ன‌ ஒரு கவனக்குறைவு...இந்த நிறுவனத்துக்கு சில நொடிகள் சிந்தனையில் ஆழ்கிறார், சகாயம்.

மதுராந்தகம் வட்டம், மாமண்டூரில் இயங்கிய இந்தக் குளிர்பான ஆலையில் விசாரணையும் தணிக்கையும் செய்கிறார். அந்தக் குளிர்பான ஆலையில் தயாரித்த சில பாட்டில்களைக் கைப்பற்றி கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பியபோது, 'அந்தக் குளிர்பானம் குடிப்பதற்கு உகந்தது அல்ல’ என்ற சான்றிதழை அளித்தது!

எத்தனை எத்தனை குளிர்பானப் பிரியர்கள் இந்தக் குடிக்க இலாயக்கற்ற‌ பானத்தை அருந்தி உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்கிறார், சகாயம்.

அடுத்த நொடி....பெப்சி நிறுவனம் இருந்த பகுதியின் வட்டாட்சியரை அழைக்கிறார். "எனக்கு ஒரு நாலு பூட்டு வேணும்.  கதவில் நுழைத்துப்
பூட்ட, பூட்டுக்கேத்த சங்கிலிகள் நான்கு வாங்கிக்கொள்ளுங்கள். உடனே வாங்கிக்கொண்டு என்னை வந்து பாருங்க." மாவட்ட வருவாய் அதிகாரி உத்திரவிட்டுவிட்டார். ஏன்? எதற்கு என்று கேட்க முடியுமா? அடுத்த அரைமணி நேரத்தில் பூட்டும் சங்கிலிகள் சகிதமாக‌
வட்டாட்சியர் பவ்யமாக சகாயத்தின் முன் நிற்கிறார்.

"அய்யா...நீங்க கேட்டமாதிரி வாங்கீட்டு வந்துட்டேன்," பணிவாகச் சொல்கிறார்.

"அப்படியா...சரி... வாங்க போகலாம். விடுவிடுவென்று போய் காரில் ஏறுகிறார். வட்டாட்சியருக்கோ ஒன்றும் புரியவில்லை.
மாவட்ட வருவாய் அதிகாரியின் கார் பெப்சி நிறுவனம் முன்பாகப் போய் நிற்கிறது.  பின் தொடர்ந்த வட்டாட்சியர் இறங்கி
வருகிறார்.

"நீங்க உள்ள போய் இருக்கிற அலுவலர்கள், பணியாளர்கள் எல்லோரையும் வெளியே வரச் சொல்லிவிட்டு நீங்க வாங்கி வந்த‌
பூட்டுக்களைக் கொண்டு பூட்டிச் சீல் வையுங்க," உத்திரவிடுகிறார் சகாயம்.

"அய்யா....!?" வட்டாட்சியர் படபடப்போடு சகாயத்தின் முகத்தைப் பார்க்கிறார்.

"என்ன நான் சொன்னது புரியலையா... உள்ள இருக்கிற அத்தனை ஊழியர்களையும் வெளிய வரச் சொல்லிவிட்டு பூட்டி சீல் வையுங்க.
இந்தாங்க..அதுக்கான எனது உத்திரவு...."

"அய்யா.... கலெக்டருக்கிட்ட கொஞ்சம் கேட்டுகிட்டுச் செய்யலாம்ங்களாய்யா...."

"இங்க பாருங்க... நான் சொல்றதைச் செய்யிறீங்களா? இல்ல நானே..."

"இல்லங்கய்யா.... அது ஒரு பன்னாட்டு நிறுவனம்...பெரிய பெரிய ஆள்களோடயெல்லாம் தொடர்பு வச்சிருக்கிறவங்க...."

"அதனால.... என் கடமையை நான் செய்யக்கூடாதா?.."

"இல்லைங்கய்யா இத வச்சு நாளைக்கு உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்துரப்படாது பாருங்க....அதுக்காக...."

"எனக்குத்தான பிரச்னை வரும்.... அத நான் பாத்துக்குறேன். இப்ப நீங்க உள்ள போய்ச் சொல்லீட்டு, நான் சொன்னதைச்
செய்யுங்க...." உத்திரவிடும் தொனியில் உறுதியாகச் சொல்கிறார், சகாயம்.

"சரிங்கய்யா..சரிங்கய்யா..." என்ற வட்டாட்சியர் உள்ளே போய் நிறுவனப் பொதுமேலாளரை அணுகிச் சொல்கிறார்.

நிலைமையின் உக்கிரம் எதுவும் புரியாமல், " ஒரு இரண்டு மணிநேரம் அவகாசம் வாங்கிக்கொடுங்க; அதுக்குள்ள நாங்க இத‌
எப்படி டீல் பண்ணனுமோ அப்படிப் பண்ணிக்கிறோம்," சாவகாசமாகச் சொல்கிறார், பொதுமேலாளர்.

வட்டாட்சியர் வேர்க்க விறுவிறுக்கத் திரும்பவும் ஓடிவருகிறார் மாவட்ட வருவாய் அதிகாரியை நோக்கி!

"அய்யா...ஒரு ரெண்டு மணிநேரம் அவகாசம் வேணும்கிறாங்க....."என்று குழைந்து நெளிந்து சொல்கிறார் வட்டாட்சியர்!

"ரெண்டு நிமிசம் கூட அவகாசம் கிடையாது. உடனே வெளியே எல்லாரும் வரணும். இல்லைன்னா காவல் துறையை
வரவழைத்து எல்லோரையும் கைது பண்ணீட்டு சீல் வைப்பேன்னு சொல்லுங்க...." தெளிவாக தன் நிலையைச் சொல்கிறார்
மாவட்ட வருவாய் அதிகாரியான சகாயம்.

மறுபடியும் வட்டாட்சியர் நிறுவனத்துக்குள் ஓட்டமும் நடையுமாகப் போய்ச் சொல்கிறார்.  அரஸ்ட் பண்ணப் போறாங்களா?
இப்போது உள்ளே இருந்த அனைவரிடமும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது.  அடுத்த சில நிமிடங்களில் உள்ளே இருந்த‌
அனைவரும் பரபரப்பாக வெளியேறுகின்றனர்.

வருவாய்த் துறை வட்டாட்சியர் மாவட்ட வருவாய் அதிகாரியின் முன்னிலையில் நிறுவனத்தின் நான்கு பக்கங்களும் பூட்டி சீல் வைக்கப்படுகிறது.  

"சரி நீங்க போங்க.... நான் இன்னொரு ஆய்வுக்காகப் போறேன். நீங்க போகலாம்.." என்று வட்டாட்சியரைப் போகச் சொல்லிவிட்டு
காரில் சகாயம் கிளம்புகிறார்.

தொழிற் துறை செயலர் சகாயத்தை தொடர்புகொள்ள முயல்கிறார். இயலவில்லை.   எங்கே மாவட்ட வருவாய் அதிகாரி என்று பலமுனைத் தொடர்புகள் என்று மாவட ஆட்சியரைத் துளைத்தெடுக்கிறார்கள். மாவட்ட வருவாய் அதிகாரி இல்லத் தொலைபேசி அலறி அலறி அடங்குகிறது. எல்லா அழைப்புகளுக்கும் இப்போதையத் தேவை மா.வ.அதிகாரி சகாயம்! 

நள்ளிரவு வரை தொலைபேசி அழைப்புகள் அழைத்து அலுத்து ஓய்ந்த பொழுதுகளில் தன் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு இல்லம் வரும் சகாயத்துக்கு தலைமைச் செயலகத்திலிருந்தும் ஆட்சியரிடமிருந்தும் அலுக்காமல் வந்த அழைப்புகள் தெரிவிக்கப்படுகிறது.

மறுநாள்....மாவட்ட ஆட்சியர் இறை அன்புவிடம் பெப்சி நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையைக் கொடுக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் சகாயத்தை மொய்க்கிறார்கள்.
"எப்படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தினை பூட்டினீர்கள்?
"உங்கள் உயரதிகாரிகளிடம் இதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறீர்களா?"
"அவகாசம் கொடுக்காமல் அவசராவசரமாக நடவடிக்கை எடுத்தது ஏன்?

செய்தியாளர்களின் கேள்விக்கணைகளால் சகாயம் துளைத்தெடுக்கப்படுகிறார்.

"மக்கள் உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் சட்டத்துக்குட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்திருக்கிறேன். தவறு செய்தது சிறிய நிறுவனமா? பெரிய நிறுவனமா? என்பது ஒரு பிரச்னையல்ல; யார் செய்தாலும் தவறு தவறுதான்; அந்தத் தவறுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வளவுதான். இது குறித்து நான் மேற்கொண்டு சொல்ல ஒன்றுமில்லை என்று சுருக்கமாக முடித்துக்கொள்கிறார், சகாயம்.

ஆனால் இந்தச் செய்தி ஒரு பெட்டிச் செய்தியாகக் கூட எந்த நாளிதழும் செய்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த வார ஜூனியர் விகட‌னில் பொதுமக்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட செய்தியாக வெளிவந்திருந்தது.
அன்றைய தொழிற்துறைச் செயலர் சீனிவாசனும் அன்றைய மத்திய அமைச்சருமான முரசொலிமாறனும் தொலைபேசியில்
தொடர்புகொண்டு..... இந்த நடவடிக்கைக்காகப் பாராட்டியிருப்பார்கள் என்று பார்க்கிறீர்களா? (அப்படியென்றால்தான் நாடு உருப்பட்டுவிடுமே!?) சகாயத்தை டோஸ் விட்டதாக ஜூனியர் விகடன் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் சகாயத்தின் தெளிவான நடவடிக்கையால் எந்த உயரதிகாரிகளாலும் ஒன்றும் செய்யமுடியவில்லையே. பெப்சி நிறுவனம் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தலை கீழாக நின்றுபார்த்தும் ஒன்றும் நடக்கவில்லையே! 

அந்தக் குளிர்பான நிறுவனத்தின் மீதான விசாரணையின்போது மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஆஜர் ஆனார்கள். ஆனால், அவர்களுக்கு எதிராக 73 வயதான சம்பத் முதலியார் என்கிற சாதாரண முதியவர் தனது வாதங்களை வைத்தார்.

கடைசியில் நீதிமன்றம், பல விதமான நிபந்தனைகளை விதித்தே உத்திரவு பிறப்பித்தது. அதன் பிறகே, சகாயம் போட்ட பூட்டை பெப்சி நிறுவனத்தால் திறக்க முடிந்தது.