ஞாயிறு, 16 மார்ச், 2014

6. "எனக்குத்தான பிரச்னை வரும்...."

24-11-1999 ல் பெப்சிக்கே......பெப்பே....!

அன்று மனுக் கொடுக்க வந்தவர்களில் ஒருவர் வித்தியாசமான மனு ஒன்றைக் கொடுக்கிறார். மனுவுடன் ஒரு பாட்டிலையும் சேர்த்துக்
கொடுக்கிறார்.  பெப்சி பாட்டிலை நீங்க வச்சுக்கங்க. மனுவை மட்டும் அய்யாட்ட கொடுங்க என்கிறார் சகாயத்தின் உதவியாளர். அந்த பாட்டில்தான் பிரச்னை என்கிறார், மனுகொடுக்க வந்தவர்.  

மிக மோசமான அழுக்குப் படலம் ஒன்று இந்த பெப்சி பாட்டிலில் இருக்கிறது என்று மனுக் கொடுக்க வந்த சம்பத் முதலியார் பெப்சி பாட்டிலைக் கொடுக்கிறார்.

கடையில் வாங்கிய பெப்சி பாட்டிலில் அழுக்குப் படலம் உறைந்து கிடக்கிறது.  பார்க்கிறார், சகாயம்.  நிறுவனம் சீலிட்ட, இன்னும் திறக்கப்படாத பெப்சி புட்டியினுள் மூக்குச் சளி போல ஒரு அழுக்குப்படலம் அசைந்தாடுகிறது. என்ன‌ ஒரு கவனக்குறைவு...இந்த நிறுவனத்துக்கு சில நொடிகள் சிந்தனையில் ஆழ்கிறார், சகாயம்.

மதுராந்தகம் வட்டம், மாமண்டூரில் இயங்கிய இந்தக் குளிர்பான ஆலையில் விசாரணையும் தணிக்கையும் செய்கிறார். அந்தக் குளிர்பான ஆலையில் தயாரித்த சில பாட்டில்களைக் கைப்பற்றி கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பியபோது, 'அந்தக் குளிர்பானம் குடிப்பதற்கு உகந்தது அல்ல’ என்ற சான்றிதழை அளித்தது!

எத்தனை எத்தனை குளிர்பானப் பிரியர்கள் இந்தக் குடிக்க இலாயக்கற்ற‌ பானத்தை அருந்தி உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்கிறார், சகாயம்.

அடுத்த நொடி....பெப்சி நிறுவனம் இருந்த பகுதியின் வட்டாட்சியரை அழைக்கிறார். "எனக்கு ஒரு நாலு பூட்டு வேணும்.  கதவில் நுழைத்துப்
பூட்ட, பூட்டுக்கேத்த சங்கிலிகள் நான்கு வாங்கிக்கொள்ளுங்கள். உடனே வாங்கிக்கொண்டு என்னை வந்து பாருங்க." மாவட்ட வருவாய் அதிகாரி உத்திரவிட்டுவிட்டார். ஏன்? எதற்கு என்று கேட்க முடியுமா? அடுத்த அரைமணி நேரத்தில் பூட்டும் சங்கிலிகள் சகிதமாக‌
வட்டாட்சியர் பவ்யமாக சகாயத்தின் முன் நிற்கிறார்.

"அய்யா...நீங்க கேட்டமாதிரி வாங்கீட்டு வந்துட்டேன்," பணிவாகச் சொல்கிறார்.

"அப்படியா...சரி... வாங்க போகலாம். விடுவிடுவென்று போய் காரில் ஏறுகிறார். வட்டாட்சியருக்கோ ஒன்றும் புரியவில்லை.
மாவட்ட வருவாய் அதிகாரியின் கார் பெப்சி நிறுவனம் முன்பாகப் போய் நிற்கிறது.  பின் தொடர்ந்த வட்டாட்சியர் இறங்கி
வருகிறார்.

"நீங்க உள்ள போய் இருக்கிற அலுவலர்கள், பணியாளர்கள் எல்லோரையும் வெளியே வரச் சொல்லிவிட்டு நீங்க வாங்கி வந்த‌
பூட்டுக்களைக் கொண்டு பூட்டிச் சீல் வையுங்க," உத்திரவிடுகிறார் சகாயம்.

"அய்யா....!?" வட்டாட்சியர் படபடப்போடு சகாயத்தின் முகத்தைப் பார்க்கிறார்.

"என்ன நான் சொன்னது புரியலையா... உள்ள இருக்கிற அத்தனை ஊழியர்களையும் வெளிய வரச் சொல்லிவிட்டு பூட்டி சீல் வையுங்க.
இந்தாங்க..அதுக்கான எனது உத்திரவு...."

"அய்யா.... கலெக்டருக்கிட்ட கொஞ்சம் கேட்டுகிட்டுச் செய்யலாம்ங்களாய்யா...."

"இங்க பாருங்க... நான் சொல்றதைச் செய்யிறீங்களா? இல்ல நானே..."

"இல்லங்கய்யா.... அது ஒரு பன்னாட்டு நிறுவனம்...பெரிய பெரிய ஆள்களோடயெல்லாம் தொடர்பு வச்சிருக்கிறவங்க...."

"அதனால.... என் கடமையை நான் செய்யக்கூடாதா?.."

"இல்லைங்கய்யா இத வச்சு நாளைக்கு உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வந்துரப்படாது பாருங்க....அதுக்காக...."

"எனக்குத்தான பிரச்னை வரும்.... அத நான் பாத்துக்குறேன். இப்ப நீங்க உள்ள போய்ச் சொல்லீட்டு, நான் சொன்னதைச்
செய்யுங்க...." உத்திரவிடும் தொனியில் உறுதியாகச் சொல்கிறார், சகாயம்.

"சரிங்கய்யா..சரிங்கய்யா..." என்ற வட்டாட்சியர் உள்ளே போய் நிறுவனப் பொதுமேலாளரை அணுகிச் சொல்கிறார்.

நிலைமையின் உக்கிரம் எதுவும் புரியாமல், " ஒரு இரண்டு மணிநேரம் அவகாசம் வாங்கிக்கொடுங்க; அதுக்குள்ள நாங்க இத‌
எப்படி டீல் பண்ணனுமோ அப்படிப் பண்ணிக்கிறோம்," சாவகாசமாகச் சொல்கிறார், பொதுமேலாளர்.

வட்டாட்சியர் வேர்க்க விறுவிறுக்கத் திரும்பவும் ஓடிவருகிறார் மாவட்ட வருவாய் அதிகாரியை நோக்கி!

"அய்யா...ஒரு ரெண்டு மணிநேரம் அவகாசம் வேணும்கிறாங்க....."என்று குழைந்து நெளிந்து சொல்கிறார் வட்டாட்சியர்!

"ரெண்டு நிமிசம் கூட அவகாசம் கிடையாது. உடனே வெளியே எல்லாரும் வரணும். இல்லைன்னா காவல் துறையை
வரவழைத்து எல்லோரையும் கைது பண்ணீட்டு சீல் வைப்பேன்னு சொல்லுங்க...." தெளிவாக தன் நிலையைச் சொல்கிறார்
மாவட்ட வருவாய் அதிகாரியான சகாயம்.

மறுபடியும் வட்டாட்சியர் நிறுவனத்துக்குள் ஓட்டமும் நடையுமாகப் போய்ச் சொல்கிறார்.  அரஸ்ட் பண்ணப் போறாங்களா?
இப்போது உள்ளே இருந்த அனைவரிடமும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது.  அடுத்த சில நிமிடங்களில் உள்ளே இருந்த‌
அனைவரும் பரபரப்பாக வெளியேறுகின்றனர்.

வருவாய்த் துறை வட்டாட்சியர் மாவட்ட வருவாய் அதிகாரியின் முன்னிலையில் நிறுவனத்தின் நான்கு பக்கங்களும் பூட்டி சீல் வைக்கப்படுகிறது.  

"சரி நீங்க போங்க.... நான் இன்னொரு ஆய்வுக்காகப் போறேன். நீங்க போகலாம்.." என்று வட்டாட்சியரைப் போகச் சொல்லிவிட்டு
காரில் சகாயம் கிளம்புகிறார்.

தொழிற் துறை செயலர் சகாயத்தை தொடர்புகொள்ள முயல்கிறார். இயலவில்லை.   எங்கே மாவட்ட வருவாய் அதிகாரி என்று பலமுனைத் தொடர்புகள் என்று மாவட ஆட்சியரைத் துளைத்தெடுக்கிறார்கள். மாவட்ட வருவாய் அதிகாரி இல்லத் தொலைபேசி அலறி அலறி அடங்குகிறது. எல்லா அழைப்புகளுக்கும் இப்போதையத் தேவை மா.வ.அதிகாரி சகாயம்! 

நள்ளிரவு வரை தொலைபேசி அழைப்புகள் அழைத்து அலுத்து ஓய்ந்த பொழுதுகளில் தன் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு இல்லம் வரும் சகாயத்துக்கு தலைமைச் செயலகத்திலிருந்தும் ஆட்சியரிடமிருந்தும் அலுக்காமல் வந்த அழைப்புகள் தெரிவிக்கப்படுகிறது.

மறுநாள்....மாவட்ட ஆட்சியர் இறை அன்புவிடம் பெப்சி நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையைக் கொடுக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் சகாயத்தை மொய்க்கிறார்கள்.
"எப்படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தினை பூட்டினீர்கள்?
"உங்கள் உயரதிகாரிகளிடம் இதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறீர்களா?"
"அவகாசம் கொடுக்காமல் அவசராவசரமாக நடவடிக்கை எடுத்தது ஏன்?

செய்தியாளர்களின் கேள்விக்கணைகளால் சகாயம் துளைத்தெடுக்கப்படுகிறார்.

"மக்கள் உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் சட்டத்துக்குட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்திருக்கிறேன். தவறு செய்தது சிறிய நிறுவனமா? பெரிய நிறுவனமா? என்பது ஒரு பிரச்னையல்ல; யார் செய்தாலும் தவறு தவறுதான்; அந்தத் தவறுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வளவுதான். இது குறித்து நான் மேற்கொண்டு சொல்ல ஒன்றுமில்லை என்று சுருக்கமாக முடித்துக்கொள்கிறார், சகாயம்.

ஆனால் இந்தச் செய்தி ஒரு பெட்டிச் செய்தியாகக் கூட எந்த நாளிதழும் செய்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த வார ஜூனியர் விகட‌னில் பொதுமக்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட செய்தியாக வெளிவந்திருந்தது.
அன்றைய தொழிற்துறைச் செயலர் சீனிவாசனும் அன்றைய மத்திய அமைச்சருமான முரசொலிமாறனும் தொலைபேசியில்
தொடர்புகொண்டு..... இந்த நடவடிக்கைக்காகப் பாராட்டியிருப்பார்கள் என்று பார்க்கிறீர்களா? (அப்படியென்றால்தான் நாடு உருப்பட்டுவிடுமே!?) சகாயத்தை டோஸ் விட்டதாக ஜூனியர் விகடன் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் சகாயத்தின் தெளிவான நடவடிக்கையால் எந்த உயரதிகாரிகளாலும் ஒன்றும் செய்யமுடியவில்லையே. பெப்சி நிறுவனம் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தலை கீழாக நின்றுபார்த்தும் ஒன்றும் நடக்கவில்லையே! 

அந்தக் குளிர்பான நிறுவனத்தின் மீதான விசாரணையின்போது மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஆஜர் ஆனார்கள். ஆனால், அவர்களுக்கு எதிராக 73 வயதான சம்பத் முதலியார் என்கிற சாதாரண முதியவர் தனது வாதங்களை வைத்தார்.

கடைசியில் நீதிமன்றம், பல விதமான நிபந்தனைகளை விதித்தே உத்திரவு பிறப்பித்தது. அதன் பிறகே, சகாயம் போட்ட பூட்டை பெப்சி நிறுவனத்தால் திறக்க முடிந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக