ஞாயிறு, 30 மார்ச், 2014

10. கவனிப்பாரின்றிப்போன சுதந்திரப் போராட்ட தியாகி

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம் பொது மக்களிடம் மனு வாங்கிக்கொண்டிருக்கிறார்.  ஒவ்வொருவரிடமும் பொறுமையாக விபரம் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து
உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவிடுகிறார். துறை அதிகாரி அங்கு இல்லை என்றால் அந்தத் துறை அதிகாரியை தொலைபேசியிலோ கைபேசியிலோ அழைத்து இந்த மனுவின் மீது இத்தனை நாளைக்குள் இன்னபடி நடவடிக்கை எடுத்துவிட்டு என்னிடம் அந்த நடவடிக்கை குறித்து தகவல் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக் கிறார்.

பொதுவாக ஆட்சியர்கள் மனுவை வாங்கியதும் மனுவின் ஓரத்தில் ஒரு குறிப்பை எழுதி சுருக்கொப்பமிட்டு அருகிலுள்ள ஒரு அதிகாரியிடம் கொடுத்துவிடுவார்கள்.

அந்த மனுவை அவர் அருகிலுள்ள அலுவலரிடம் கொடுத்து பதிவேட்டில் மனுவின் தன்மை குறித்து பதிவு செய்து அதற்கு ஒரு கடித எண் குறிப்பிட்டு தொடர்புடைய‌ அலுவலருக்கு மேலதிக நடவடிக்கைக்கு அனுப்பிவிடுவார். மனுதாரரைப் பார்த்து
"நீங்க போகலாம். உங்க மனுவின் மீது தாசில்தார் நடவடிக்கை எடுத்து உங்களுக்கு பட்டாக் கொடுத்துவிடுவார் என்று சொல்லி அனுப்பிவிடுவதுதான் வழக்கம்.

ஆனால் ஆட்சியர் சகாயம் அப்படிச் செய்யாமல் முதியோர் உதவித்தொகையா? ஏம்மா? உங்களுக்கு கெடைக்கலியா? என்பார். அய்யா, தாசில்தாரிடம் எத்தனையோதரம் மனுக்கொடுத்துட்டேன்.  பிஞ்சனே (பென்சன் என்ற ஆங்கிலப் பதம் நம்மவர்கள் நாவில்
பிஞ்சனாகி தமிங்கிலமாகி உதிர்கிறது.) கெடைக்கலிங்கய்யா என்பார்.

"அது எந்தத் தாசில்தார்..இங்க வந்திருக்காரா? இல்லையா? உதவியாளரை அழைத்து அந்தத் தாசில்தாரை என்னிடம் போன்ல பேசச் சொல்லுங்க.."என்பார்.  உதவியாளர் தாசில்தார் போன் லயன்ல இருக்கார் என்று வாங்கிக் கொடுப்பார்.  அந்தத் தாசில்தாரிடம் அந்த மனுதாரருக்கு ஏன் முதியோர் உதவித்தொகை கொடுக்கலை என்று விளக்கம் கேட்பார்; அதன் பின் மறுபடியும் இப்ப அனுப்புறேன்...மூனே நாள்ல முதியோர் உதவித் தொகையை
கொடுத்துட்டு எனக்குத் தகவல் சொல்லுங்க..."என்பார்.

இப்படி ஒவ்வொரு மனுவையும் சிரத்தையோடு கவனித்து பரிவோடு அனுப்புவதால் மனுக்கொடுக்கும் கூட்டம் ஆமை வேகத்தில் நகரும்.  மனுக்கொடுக்கும் கூட்டம் குறையாமல் வளர்ந்துகொண்டு
தானிருக்கும். இதுதான் வழக்கமாக ஆட்சியர் சகாயத்தின் மனுநீதி நாளில் நடக்கும் நிகழ்வாக‌ இருக்கும்.

அப்படியான ஒருநாளில்....மனுக்கொடுப்பவர்கள் வரிசையில் ஒரு இளம்பெண்  கையில் மனுவேதும் இல்லாமல் அவரது
முறைக்காக நகர்ந்து வந்து ஆட்சியர் சகாயம் முன் நிற்கிறார். 

"எங்கம்மா உன் மனு?"

"அய்யா எனக்கு ஒரு உதவி வேணுங்கய்யா"

"என்னம்மா உதவி வேணும்"

"எனக்கு ஒரு ஒதவி வேணுங்கய்யா."

"என்ன படிச்சிருக்கீங்க?"

"அய்யா, எனக்கு பார்வை கெடையாதுங்கய்யா;படிப்பும் கெடையாது. எங்க‌அப்பா ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகிங்கய்யா. பாண்டமங்கலம் தியாகி தர்மலிங்கம் பிள்ளைங்க அய்யா. அவரோட மகள் உமாராணி, நான். அவருக்கு தியாகிக்கு கெடைக்க‌ வேண்டிய பென்சன் கூட கெடைக்கலீங்கய்யா. அது கெடைச்சாக்கூட புண்ணியமா இருக்குங்க அய்யா."

அந்தப் பெண் சொன்ன பிறகுதான் ஆட்சியர் சகாயத்துக்கு அந்த இளம்பெண்ணின் சூழல் புரிகிறது. இந்த நாட்டில் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின் பிள்ளைக்கா இந்த நிலை. ஒரு கணம் திகைத்துப் போகிறார். நாடு சுதந்திரம்  வாங்கி இத்தனை
ஆண்டுகளுக்குப் பின்னும் கூட இந்த நாட்டுக்காக போராடிய ஒரு தியாகியின் குடும்பம் எத்தகைய அவல நிலையில் இருக்கிறது. மனம் கலங்குகிறார்.

அதிகாரிகளை வரவழைத்து அங்கேயே ஆலோசிக்கிறார், சகாயம்.  வழக்கம் போல‌ அதிகாரிகள் சொல்லும் பதிலைச் சொல்லுகிறார்கள். "புதுசா தியாகிகள் பென்சன் கொடுக்க இயலாது என்பதை நயந்தும் பயந்தும் பவ்யமாகச் சொல்லுகிறார்கள்.

தாசில்தாரை அழைத்து தியாகியின் வீட்டுக்குப் போய் விசாரிச்சு எனக்கு ஒரு அறிக்கையை ரெண்டு நாளைக்குள் குடுங்க என்கிறார், சகாயம்.

அறிக்கை வந்ததும், பார்க்கிறார். 

இந்தத் தியாகியின் மனுவைப் பரிசீலித்ததில், அவருடன் சிறையில் இருந்த மற்றொரு  தியாகி, சிறையில் தன்னுடன் இருந்ததாகச் சான்று அளித்துள்ளதை ஏற்று அரசு தனி நேர்வாகக் கருதி தியாகிக்குரிய உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் என்ற அளவில் பரிந்துரைக்கிறேன்," என்று எழுதிக் கையொப்பமிட்டு அரசுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்புகிறார்.  அத்தோடு தன் பணி முடிந்துவிட்டது என்று கருதாமல் தொடர்புடைய‌
துறையின் மேலதிகாரியிடமும் தொடர்புகொண்டு அம்மனுவின் மீது உடனடியான‌ நடவடிக்கை கோருகிறார்.

ஆட்சியர் சகாயத்தின் தொடர் முயற்சியின் விளைவால் அந்தத் தியாகியின் குடும்பத்துக்கு பென்சனும் வாங்கிக்கொடுக்கிறார்.

தியாகியின் மகள் ஆட்சியர் சகாயத்தை பென்சன் கிடைத்ததும் ஆட்சியர் அலுவலகம் சென்று சந்திக்கிறார்.

அன்று.....அய்யா, உதவி செய்யுங்கய்யா..... என்று வந்த அந்தப் பெண் இப்போது சகாயத்தின் முன் நிற்கிறார். 

தியாகி தர்மலிங்கம் மகள்  உமாராணி, அமைதியாகச் சொல்கிறார்.

"அண்ணே....இத்தனை நாளும் எனக்கு எதையும் பாக்க முடியலைன்னு வருத்தப்பட்டதில்லை இப்ப எனக்கு வருத்தமாக இருக்கு.  அண்ணே உங்களைப் பாக்கனும்ண்ணே..."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக