காஞ்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக.....
காஞ்சிபுரத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிய இரண்டாண்டு காலத்தில் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும்
சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் சகாயம்! பொதுமக்களுக்கு அவர் தெய்வமாகக் காட்சியளித்தார்!! எத்தனையோ சம்பவங்களைச்
சொல்லலாம். இந்திய ஆட்சிப்பணிக்கு வரும் இளைய தலை முறைக்குச் சிறந்த வழிகாட்டி சகாயம்! அவருடைய அனுபவங்களைத்
தொகுப்பதன் காரணமே இப்படித்தான் பணியாற்ற வேண்டும் என்பதற்கு அவர் சிறந்த இலக்கணம் என்றேசொல்லவேண்டும்!
அரசு அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு திமுக, அதிமுக என்ற கட்சி பேதமில்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு மணலைக் கொள்ளையடித்தனர். விடுவாரா சகாயம்! பழவேலி என்ற இடத்தில் மணலை லாரி லாரியாக ஏற்றிக்கொண்டு பறக்கும் தகவலைக் கேட்டு பழவேலிக்குப் பறந்தார் சகாயம். அவர் போன நேரத்தில் மாட்டிக்கொண்டது மூன்று லாரிகள்! சகாயத்துடன் சென்ற அதிகாரிகள் அவரிடம் கிசுகிசுத்தனர். இந்த லாரிகள் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் தொடர்புடையது. எதற்கு வீண்வம்பு சார்.....!? இவ்வளவு போதாதா? சீறிப்பாய்ந்த மணல் லாரிகளை புயல் போலப் புறப்பட்டுப்போய் மடக்கினார். ஆவணங்கள் ஏதுமின்றி ஆர்ப்பாட்டமாய்க் கிளம்பிய மணல் லாரிகளுக்கு சகாயத்திடமிருந்து சகாயம் கிடைக்கவில்லை.
பிடிக்கப்பட்ட லாரிகள் சகாயத்தின் முன் மண்டியிட்டிருந்த சில மணித்துளிகளுக்குள் சைதை எம்.எல்.ஏ.,வாக இருந்த கிட்டாது என்பதற்கு
எதிர்பதம் நாமகரணம் கொண்டவரிடமிருந்து சகாயத்தின் உதவியாளருக்கு தொலைபேசி வருகிறது. "அங்க இங்க கைவச்சு இப்ப எங்க
அடி மடியில கைவச்சிட்டாரு உங்க மாவட்ட வருவாய் அதிகாரி. இது நல்லதுக்கில்ல...." என்ற குமுறல்களுக்கோ, சலசலப்புக்கோ அஞ்சாமல் பழவேலி மணல் கொள்ளைக்குப் போட்டார் வருவாய்த் துறை வேலியை.
அப்படி கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு மணற்கொள்ளையைத் தடுக்க இரவு பகல் பாராது பாடுபட்ட சகாயத்தை தீர்த்துக்கட்ட இந்த மணல் கொள்ளையர்கள் வெறியாட்டம் போட்ட ஒரு சம்பவமும் உண்டு!
"ஏங்க இன்னைக்கு சீக்கிரமே கெளம்பீட்டீங்க! இன்னைக்கு என்ன நாள்
நினைவு இருக்கா?" திருமதி சகாயம் கேட்கிறார்கள்?
"எதை மறந்தாலும் தம்பி பொறந்த நாள மறக்கமுடியுமா? சாயாந்திரம்
நான் வந்து கேக் வெட்டி கொண்டாடிடுவோம்,"என்கிறார் சகாயம்.
"மறக்காம வந்துருங்க... அந்த வேலை, இந்த வேலைன்னு அங்க இங்க போயிட்டேன்னு
தம்பிய காக்க வச்சிராதீங்க" -குடும்பத் தலைவிக்கே உரித்தான கரிசனத்தில் திருமதி சகாயம் சொல்கிறார்.
"இல்ல...இல்ல வந்துருவேன்." கிளம்புகிறார்.
அலுவலகம் செல்லும் வழியில் ஒரு சில ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, அலுவலகம் நுழைகிறார், மாவட்ட வருவாய் அதிகாரி சகாயம். அலுவலகம் நுழைந்துவிட்டால் அவ்வளவுதான். பசியாவது, களைப்பாவது பம்பரமாக சுழலுவார் தன் பணி உலகத்தில்!
இடையில் உதவியாளர் மோகன் ஒரு ஆய்வுப்பணிக்குப் போக வேண்டுமென்று நினைவூட்டுகிறார். ஆய்வுப்பணி...அது ஒரு தனி உலகம். கோப்புகளில் கோணல்மாணலாக உறங்கிக்கிடக்கும் எழுத்துக்களப் பார்ப்பதும் பொய், காற்றுவாக்கில் காதில் வந்து விழுவதும் பொய்! நேரில் தீர விசாரித்தறிவதே மெய்!என்ற சித்தாந்தச் சிதறல்களோடிருப்பவர் சகாயம்! ஆய்வுச் சமுத்திரத்தில் மூழ்கிய சகாயத்துக்கு தன் மகன் பிறந்த நாளை நினைக்க நேரமில்லாமல் போனது.
ஒருவழியாக இல்லம் வந்து சேரும்போது அருமை மகன் திலீபன் அப்பாவின் வரவுக்காக காத்திருக்கிறான். வாடிவதங்கியிருந்த முகம் அப்பாவைக் கண்ட உற்சாகம் பீறிட்டெழுகிறது. சோர்ந்து கிடந்த உள்ளங்களில் குதூகலமான பிறந்த நாள் கொண்டாட்டக் களை பூத்துப் போகிறது. அந்த சந்தோசத் தருணங்களில் இருந்த போது சகாயத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு!
"அப்பா...அப்பா....போனை எடுக்காதீஙகப்பா..எடுத்தா ஒங்களுக்கு எதாவது வேலை வந்துரும்..."தன் செல்ல மகன், எங்கே வந்த அப்பா திரும்பவும் கிளம்பிவிடுவாரோ என்ற தன் சிறு சந்தோசம் பறிபோய்விடக்கூடாது என்ற ஏக்கம்.
"இல்லப்பா நான் போகலை... இதோ நான் பேசீட்டு வந்துடறேன்..." என்று ஒருவழியாக மகனைச் சமாளித்துவிட்டு தொலைபேசியில் தொடர்புகொண்டவரிடம் பேசுகிறார், சகாயம். பேசப் பேச அவர் முகம் மாறுகிறது. அப்போது நள்ளிரவு சரியாக
12மணி!
தன்னை வீட்டில் விட்டுவிட்டு, வீட்டுக்குச் சென்ற தன் உதவியாளர் மோகனை,உடனே தொலைபேசியில் அழைக்கிறார்.
"மோகன் ஒரு அவசரம் உடனே டிரைவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வாருங்கள்," என்கிறார், சகாயம்.
தொலைபேசியில் வந்த தகவல் இதுதான்!செங்கற்பட்டு அருகேயுள்ள பழைய சீவரம் பாலாற்றில் லாரி, லாரியாக மணல் ஏற்றிக்கொண்டு பறக்கிறது. உடனே வந்தால் அத்தனை லாரிகளையும் மடக்கிப் பிடிக்கலாம், என்பதுதான் அது!
பாலாற்று மணல்தான் சென்னையில் கம்பீரமாக எழுந்து நிற்கும் பல கட்டிடங்களுக்கு மூலாதாரப்பொக்கிசம்!
மணற்கொள்ளை தாதாக்களுக்கு பொன் முட்டையிடும் வாத்து!
பூமித் தாயின் அடிவயிற்றைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க எவ்வளவோ அதிரடி நடவடிக்கைகளை மாவட்ட வருவாய் அதிகாரியாக சகாயம் எடுத்தாலும் அந்தத் தொழிலில் ஊறிய பேர்வழிகள் அரசியல்வாதிகளைக் கையில் வைத்துக்கொண்டு கொள்ளையடிப்பது தொடரத்தானே செய்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் கைகளில் இருக்கும் தைரியத்தில் எப்படியும் சமாளிக்கலாம் என்ற தைரியத்தில் இந்தத் மணற்கொள்ளை தாதாக்கள் எப்போதும் தங்களைச் சுற்றி அடியாட்களுடன் வலம் வருவார்கள். அப்படிப்பட்ட தாதாக்களே சகாயத்திடம் தங்கள் பாட்சா பலிக்காமல் உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்தார்கள்.
சகாயத்தின் கண்களில் மணல் லாரி தட்டுப்பட்டுவிட்டால் போதும்; அவ்வளவுதான் லாரியைப் பறிமுதல் செய்து
ரூ.25,000 அபராதம் தீட்டிவிடுவார். எந்தச் சிபாரிசும் எடுபடாது.
400க்கும் மேற்பட்ட மணல் லாரிகளை மடக்கிப்பிடித்து அதிகபட்சமான அபராதத் தொகையை விதித்திருக்கிறார். அரசியல்வாதிகள் கட்சி பேதமில்லாமல், லாரி மணல் கொள்ளையில் ஈடுபட்டதால் மேலிடத்து சிபாரிசுகள், உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள் என்று படையெடுத்து செவி சாய்க்காத சகாயத்தை வேறிடத்துக்கு மாற்றும் முயற்சியைத் துவங்கியிருந்தனர். ஒரு முறை சுந்தரமயமான சட்டமன்ற உறுப்பினர் அப்போதைய அமைச்சர் நாஞ்சில் மனோகரனிடம் சகாயம் குறித்துப் புகார் செய்ய "அவரைப்போன்ற ஒரு சிலரையாவது வேலை செய்ய விடுங்கய்யா," என்று கடுப்பாகச் சொல்லியிருக்கிறார்.
நள்ளிரவைத் தாண்டிய அந்த நேரத்தில் ஒரு தொலைபேசித் தகவல் கிடைத்தவுடன் தன் தூக்கம் தொலைத்து, வீட்டில் அருமை மகன் பிறந்த நாள் சந்தோசத்தில் முழுமையான பங்களிக்கமுடியாமல் என் கடன் பணி செய்துகிடப்பதே என்று சகாயம், உதவியாளர் மோகன் வாகன ஓட்டியுடன் அந்த வெள்ளை நிறக்கார் பழைய சீவரம் கிராமத்தை நோக்கி விரைந்து சென்றுகொண்டிருக்கிறது.
ஆற்றின் கரையோரத்தில் கார் நிற்கும்போதே இரண்டு லாரிகள் மணலை நிரப்பிக்கொண்டிருப்பது தெரிகிறது. காரைவிட்டு இறங்குபவர்களைக் கண்டதும் லாரியை அப்படியே விட்டுவிட்டு ஏழெட்டுப் பேர்கள் பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடுகின்றனர். "ஓடாதீங்க..... நில்லுங்க...." என்று குரல் கொடுத்துக்கொண்டே இவர்களும் ஓடுகின்றனர். அந்த இரவில் ஓடி எங்கோ மறைந்துவிட்டனர்.
சகாயம் லாரிகளைப் பார்வையிடுகிறார். இரண்டு லாரிகளிலும் மணல் முக்கால் பாகத்துக்கு நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படியே
லாரியை விட்டுவிட்டுப் போனால் காலைக்குள் மணலோடு லாரிகள் காணாமல் போய்விடும். இதை எடுத்துக்கொண்டு போய் விடுவோம் என்று
தனஹ்டு டிரைவரை விட்டு லாரியை நகர்த்தச் சொல்கிறார். லாரி சிறிது நகர்ந்து மணலுக்குள் மாட்டிக்கொண்டு நகராமல் அடம்பிடிக்கவே
மாற்றுவழி என்ன? என்று ஆலோசிக்கிறார். தூரத்தில் ஒரு அரவை ஆலை ஒன்று தென்பட, அங்கு சென்று ஒரு டிராக்டர் கிடைத்தால் லாரிகளைக் கட்டி சாலைக்கு இழுத்துச் சென்றுவிடலாம் என்பதற்காக அந்த அரவை ஆலையை நோக்கிப் போகிறார்கள். இவர்களின் துரதிர்ட்டம் அங்கு எதிர்பார்த்தபடி டிராக்டர் ஏதுமில்லை. என்ன செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டே லாரிகள் இருந்த இடத்திற்குத் திரும்பி வந்தனர்.
அப்போதுதான் எதிர்பாராத அந்த நெஞ்சு பதறும் சம்பவம் நடந்துவிட்டது.
திடீரென்று ஒரு முப்பது நாற்பது பேர்கள் தடதடவென ஓடிவருவதைக் கவனித்த சகாயத்தின் உதவியாளர் மோகன் பார்த்தார். "பழைய சீவரம்
மக்கள் நீங்கள் மணல் லாரியைப் பிடிக்க வந்திருப்பதை அறிந்து வருகிறார்கள். இவங்களை வச்சு லாரியைத் தள்ளி மேட்டுக்கு கொண்டுபோய்விடலாம்,அய்யா, என்று நினைக்கிறேன்,"என்றார்.
ஆனால் வந்தவர்களோ கைகளில் அரிவாள், கம்பு, தடிகளை ஏந்தி ஓடிவந்தனர் கும்பலாக. "அடிச்சுக்கொல்லுங்கடா, யாரும் இங்கயிருந்து திரும்பிப் போகக்கூடாது;அடிச்சுக் காலிபண்ணுங்க..." என்ற குரல்கள் காற்றைக்கிழித்துக்கொண்டு வெடித்து விழுந்தபோதுதான், அது கிராமத்து மக்கள் இல்லை. மணல் கொள்ளையர்களின் கூலிப்படை என்ற உண்மை புரிந்தது.
சகாயம் அருகில் அவரது உதவியாளரும், வாகன ஓட்டியும் நின்றிருந்தனர். அந்த மணல் லாரிகளின் உரிமையாளர் திம்மசமுத்திரத்தைச் சேர்ந்த ராமலு என்கிற நபர்,"மரியாதையா ஓடிப்போயிருங்க..இல்ல நடக்கிறதே வேற...எங்காளுக எவ்வளவு பேர் இப்ப இங்க இருக்காங்க.
நீ உசிரோட போகமுடியாது..." என்று ஆவேசமாகக் கத்துகிறார்.
சகாயமோ,"நீங்க செய்வது சட்டத்துக்குப் புறம்பான செயல். நீங்க என்ன செய்தாலும் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்..." என்று
சகாயம் சொல்லி முடிக்கவில்லை. "உன்னை உயிரோடு விட்டால்தான...என்று கத்திக்கொண்டே சகாயத்தின் நெஞ்சின் மீது ஒங்கித் தாக்குகிறான் ராமலு என்ற மணல் கொள்ளையன்!
நிலை குலைந்துபோன சகாயத்தை உதவியாளரும் வாகன ஓட்டியும் கவசமாகச் சூழ்ந்து கொள்கின்றனர். அதன் பின் ஒரே தள்ளு முள்ளு ஏற்பட
நிலைமை சரியில்லை என்பதையுணர்ந்து,"அய்யா, நாம இங்கிருந்து போயிருவோம்," என்று உதவியாளரும் வாகன ஓட்டியும் சொல்ல வேறு
வழியும் புலப்படாததால் சகாயமும் அவர்கள் இருவரின் பாதுகாப்போடு காருக்கு வந்து அங்கிருந்து கிளம்பினர். அவர்களிடம் இன்றுபோல
கைபேசிகள் இல்லாத காலம் அது!
மறு நாள் சகாயம் காவல் துறையில் அளித்த புகாரின் பேரில் சிலர் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், சகாயத்தை அடித்த ராமலு கைது
செய்யப்படவில்லை. ராமலு தலை மறைவாகிவிட காவல் துறை தேடுவதாகச் சொன்னது. ஆனால் ராமலு சிதற விட்ட சில்லறைகளுக்காக
கைதுப்படலம் நடக்காமல் ஒத்திப்போடப்படுகிறது; செங்கற்பட்டு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரிய ராமலுவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இப்படியாக கண்ணாமூச்சி விளையாட்டுக்காட்டி ஒருமாதம் இழுத்தடித்த நேரத்தில் ராமலு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று மீளவும் வந்துவிடுகிற சூழலை காவல் துறையின் சில கறுப்பாடுகளால் உருவாக்கப்படுகிறது.
அந்த நேரத்தில் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளராக சைலேந்திரபாபு வந்துவிட சகாயம், அவரைத் தொடர்புகொண்டு மணல் கொள்ளையன் ராமலுவை இன்னொரு மணல்கொள்ளை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்கிறார். சைலேந்திரபாபுவும் ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளிக்கிறார்.
ராமலுவுக்கு மணல் கொள்ளை குறித்து விசாரிக்க நேரில் ஆஜராகும்படி சகாயம் முறைப்படியான அறிக்கை அனுப்புகிறார். மீண்டும் தலை மறைவாகிற ராமலுவை நேரடியாக கைது செய்ய களமிறங்குகிறார், சகாயம். ராமலு வீட்டிலிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சகிதமாக சகாயமே ராமலுவின் திம்மசமுத்திரம் வீட்டுக்குப் போகிறார். காவல் துறை வாகனங்களும் வருவாய்துறை வாகனங்களும் புடை சூழ வந்து வீட்டு முன் வந்து நின்ற தகவல்
ராமலுவுக்குச் சொல்லப்படுகிறது. எப்படி? மாவட்ட வருவாய் அதிகாரி காவலர்களுடன் சகாயமே நேரில் வருவதால் "என்கவுண்ட்டரில்" போட்டுத் தள்ளப் போகிறார்கள்...என்று சொல்ல வீட்டின் பின்பக்கமாக தப்பி ஓடிவிட்டான் ராமலு!
ஆனாலும் அடுத்த சில நாட்களில் காவல் துறை விரித்த வலையில் ராமலு சிக்கி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக