ஞாயிறு, 16 மார்ச், 2014

1. "லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து"

மக்கள் பிறக்கிறார்கள்;வாழ்கிறார்கள்;வாழ்ந்து மறைகிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே மாற்றங்களுக்குக் காரணமாயிருக்கிறார்கள்; மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிலரில்,ஏனையோரிடமிருந்து அகற்றி நிறுத்துகிறது. அண்ணாந்து பார்க்க வைக்கிறது. அவர்தான், "லஞ்சம் தவிர்த்து
நெஞ்சம் நிமிர்த்து" என்கிற வைர வரிகளுக்குச் சொந்தக்காரர்!

கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடைவெளியைக் குறைக்கவேண்டும் என்ற உரத்த சிந்தனையோடு அல்லும் பகலும் அயராது உழைக்கும் இந்திய ஆட்சிப் பணியாளார், சகாயம்! ஒரு நல்லவர்,வல்லவர், அப்பழுக்கற்ற‌ நேர்மையாளர்! அதனால், அரசுப்பணிகளில் எத்தனை விதமான இன்னல்களை,இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டும் என்பதற்கும் இவரே உதாரணம். என்னை
எத்தனை முறை இடமாற்றம் செய்தாலும் ஒருபோதும் என் நேர்மையை மாற்ற முடியாது என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் இவர், யாருக்காகவும் எதற்காகவும் வளையாத இரும்பு மனிதர்,நேர்மை என்ற கவசத்துடன் வாழும் வரலாறு !

கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார்,அண்ணல் காந்தியடிகள்! கிராமங்களின் முதுகெலும்பை நிமிர்த்திக் காட்டவேண்டும் என்ற எழுச்சி மிக்க நாமக்கல் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியராக வலம் வந்தார்! ஏழைகளுக்காக இரவுபகல் பாராது பாடுபடும் அரசு ஊழியர்! இரவு 11மணி 12மணி வரை முகாம் அலுவலகத்தில் கண்விழித்து உத்திரவுகளை அதிகாரிகளுக்குப் பிறப்பிப்பார். அதன் பிறகு கோப்புகளில் மூழ்கி எத்தனை மணிக்குப் படுக்கச் செல்கிறாரோ தெரியாது. விடிகாலையில் 5:30மணிக்கெல்லாம் எழுந்து வந்து மீண்டும் கோப்புகளில் மூழ்கிவிடுவார்.

"இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து",  "உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து" இதுதான் அவரது தாரக மந்திரங்கள்.  அலுவலகத்தை நோக்கி பொதுமக்கள் என்பதை பொதுமக்களை நோக்கி அதிகாரிகள் என்ற நிலையை உருவாக்க விழையும் ஒரு உன்னதமிக்க இலட்சியவாதி.

இப்படிப்பட்ட அரசு அலுவலர் கடந்த இருபது ஆண்டுகளில் 20 முறை இடமாற்றம் என்ற பெயரில்பந்தாடப்பட்டு இருக்கிறார்.  எங்கு சென்றாலும் அந்தத் துறையில் தன்னாலானவற்றை உளப்பூர்வமாகச்செய்ய வேண்டும் என்ற உறுதியான உள்ளம் படைத்தவர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணி புரிந்தபோது ஏழை எளிய மக்களுக்காக அவர் செய்தது ஏராளம்.அதனால்தான் அவர் மாற்றம் செய்யப்பட்டபோது மாவட்டமே போராடியது. பெண்கள் தீக்குளிக்க முயன்றனர்.அந்த அளவுக்கு அவர்களது உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றவர்.


கிராம குறைதீர்மன்றம், உழவன் உணவகம், தொடுவானம், கிராம தங்கல், ஊன்றுகோல் திட்டம், கட்டிடங்களின்நடுவே கானகம், நல்லாட்சி நண்பர்கள் இப்படியாக அவர் நாமக்கல் மாவட்டம் முழுக்க அவர் கால் படாத இடமே இல்லை என்ற அளவுக்கு மக்கள் பணியாற்றினார்.  கொல்லி மலையில் அரசு கடை நிலை ஊழியரே போகாத இடங்களுக்கெல்லாம் நடந்தே போய், அங்கே அந்த மின்சாரமற்ற கிராமத்திலேயே தங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முயன்ற இரும்பு மனிதர்.

தமிழ் மீதும் தமிழர் மீதும் ஆறாப் பற்று கொண்டவர். மனுக்கொடுப்பவர்கள் தமிழில் மனுக்கொடுக்க வேண்டும் என்று உத்திரவிட்டவர். மனு நீதி நாளில் மனுவைத் தமிழில் எழுதி ஆங்கிலத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பவர்களை "சங்கப்பலகை"யில் அமர்ந்து நூறு முறை தங்கள் கையொப்பத்தை தமிழில் எழுதிக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லி தமிழுக்கே முதலிடம் என்பதை அவ்வப்போது செய்ததிலிருந்து அவரின் அளப்பரிய தமிழ் பற்றை அறியலாம்.

திடீர்...திடீரென்று சோதனைகள் நடத்தி பணிகள் ஒழுங்காக நடைபெற வழிவகுத்தார்.  இதனால் ஆட்சியர் எந்த நேரத்தில் வருவாரோ என்ற பய உணர்விலேயே இருந்தனர்.  தான் ஆய்வுக்குச் செல்லும் இடத்தில் சம்பந்தப்பட்ட‌ அலுவலர் இல்லையென்றால் மறுநாள் அலுவலகத்தில் வந்து பார்க்கும்படி சொல்லி அவர் வரும்போது அவருக்குஅறிவுரை சொல்லி அனுப்பிவைக்கவும் செய்தார்.  அலட்சியமாக இருந்தவர்களை தற்காலிகப் பணி நீக்கம் செய்தும் அவர்கள் திருந்தவும் வாய்ப்புக்கொடுத்தார்.

முதியோர் பாதுகாப்புச் சட்டம் என்ற ஒன்று இந்தியாவில் இருந்தாலும் எங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டதாகத்தெரியவில்லை. நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பெற்றோரை அனாதைகளாக விட்ட மகனைக்கைது செய்து நடவடிக்கை எடுத்தவர்.  அதன் பிறகு அந்தச் சட்டத்தைக் காட்டியே பல பிள்ளைகளை பெற்றோருக்குஉதவச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  கிராமங்களுக்குச் சென்றால் முதியோர்களை அணுகி,"என்ன, உங்க‌ பிள்ளைகள் உங்களை நல்லா கவனிச்சுக்கிறாங்களா?"என்று கேட்காமல் ஒருநாளும் செல்வதில்லை.

இவரே ஆட்சியராக எங்களுக்கு வேண்டும் என்று நாமக்கல்லில் போராடினார்கள்; மதுரையிலும், இவரு மட்டும் நாலஞ்சு வருசம் மதுரையில இருந்தா மதுரை ஒரு சிறந்த மாவட்டமாக ஆகிவிடும் என்கின்றனர்,பொதுமக்கள். ஆனால்,"நீங்க என்ன வேலைக்கும் போங்கப்பா. கலெக்டர் வேலைமட்டும் வேண்டாம்ப்பா. உங்களோட பேச முடியலை;பல நாள் பாக்கவே முடியலை; உங்களோட எங்கயும் வெளிய கூட போகமுடியலை" என்கிறார் அவரது மகன் அருள் திலீபன்.  தந்தையாக பிள்ளைகளோடு நேரத்தைச் செலவு செய்ய இயலாத சூழல் நமக்குப் புரிகிறது. இது தான் ஆட்சியரின் நடைமுறை வாழ்க்கை நகரும் விதமாக இருக்கிறது.


''அரசுப் பதவிக்கு வந்தபோது நான் லட்சிய தாகம் நிறைந்த ஓர் இளைஞனாக இருந்தேன். நேர்மையான ஓர் அலுவலராக இருக்க வேண்டும் என்பதோடு, இந்த அமைப்பையே நேர்மையான பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற உறுதியும் இருந்தது. அநியாயங்களின்
ஆணிவேரை அறுக்க வேண்டும் என்கிற ஆவேசம். இன்று வரை எள் முனை அளவும் அந்த லட்சிய தாகத்தில் இருந்து விடுபடாது நேர்மையாகப் பயணிக்கிறேன். அநியாயங்களுக்கு எதிரான என் ஆவேசம் அப்படியேதான் இருக்கிறது. என்னிடம் பணியாற்றும் எல்லா ஊழியர்களையும் நேர்மையாகப் பணியாற்றவைக்க வேண்டும் என்ற  என் முயற்சியில் இதுவரை முழு வெற்றியை நான் பெறவில்லை.

ஆனால், நான் பெற்றிருக்கிற இந்தப் பதவியை  அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழைகள் ஏற்றம் பெற உதவ வேண்டும்; இந்த தேசத்தின் ஜீவநாடியாக இருக்கும் கிராமங்களின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்க  வேண்டும் என்ற என்னுடைய  கனவை ஓர்  அரசு அலுவலர் என்ற முறையில் ஓரளவு நான் நிறைவேற்றி இருக்கிறேன்!'' என்று வார இதழில் வாசகர் கேள்விக்கு  பதிலளித்திருப்பார்.  இப்படிப்பட்டவர்தானே நம் தேசத்துக்குத் தேவை. சகாயம் போன்ற அதிகாரிகளின் தேவை மவட்டத்தில் ஒரு நீடித்த பத்தாண்டுகளுக்கானதாக இருக்கவேண்டும். இவரைப்போன்றவர்களுக்கு இரட்டைச் சம்பளம் கொடுத்து அரசு ஊக்குவிக்க வேண்டும்.

"நமது தேசம் எப்படிப்பட்ட தேசமாக இருந்தது. இன்று லஞ்சமும், ஊழலும் எங்கும் வியாபித்து உள்ளன. நாட்டின் முன்னேற்றத்திற்கு அவை பெரும் தடைகளாக இருக்கின்றன. ஏழைகளிடம் இரக்கம் காட்டலாம். ஆனால், தவறு செய்தவர்கள் மீது இரக்கம் காட்டவே கூடாது. தவறு செய்தவர்கள் மீது நான் கடும் நடவடிக்கை எடுத்துள்ளேன். தவறு செய்த யாரையும் விட்டுவிடவும் மாட்டேன்.  நமது தேசம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகிவிட்டது. மாற்றம் வந்தாக வேண்டும். அந்த மாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி மாணவ-மாணவிகளிடமும், இளைஞர்களிடமும் இருக்கிறது. லஞ்ச, ஊழலை ஒழிக்க விரும்பும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தடைகளாக இருக்கும் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கு
2-வது சுதந்திர போராட்டத்திற்கு நாம் எல்லோரும் தயாராக வேண்டும் என்று உரத்துப் பேசுகிறார் கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில்.

ஒரு நல்ல ஆட்சியர் அந்த‌ மாவட்டத்தில் இருந்துவிட்டால் அந்த‌ மாவட்டமே ஒவ்வொரு கட்டமாகத் தன்னிறைவு பெற்றுவிடும்! அரசியல்வாதிகள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டும்ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யவேண்டும்; எந்தக் காரணம் சொல்லியும் கலைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பார்கள்!  அவர்கள் ஆட்சியில் வேலை செய்யும் நேர்மையான அதிகாரி மட்டும் ஓரிடத்தில் வேலைபார்க்க முடியாது என்பது எழுதப்படாத அரசியல் விதியாக இருக்கிறது!

எதற்கும் வளைந்துகொடுக்காத ஒருவர் வந்தால்தான் மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் நியாயமாக நடத்தமுடியும் என்று தேர்தல் ஆணையம் அலசி ஆராய்ந்தும் சல்லடைபோட்டு சலித்தெடுத்ததில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் சகாயம்! "திருமங்கலம் ஃபார்முலா" என்ற சொற்றொடர் பொய்யாகவேண்டுமானால் சகாயம்தான் சரியாக வருவார் என தேர்தல் ஆணையத்தால் மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மக்களுக்காக எடுத்த நேர்மையாளர் என்று அழைக்கப்படும் சகாயம் 16,000 கோடி கிராணைட் ஊழலை அம்பலப்படுத்தும் முய‌ற்சியில் ஈடுபட்டபோதுதான் அங்கிருந்தும் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார்.  கோ-ஆப்டெக்ஸ் துறை நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.  

அப்படி, மக்கள் இடத்தே ஒரு பெரும் மதிப்பைப் பெற்றவர், திரு. உ. சகாயம் அவர்கள். இவரை அறியாதவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை
இங்கே!
குறிப்பாக ஏழைகளுக்காக உழைப்பவர். தீமைகள் எங்கிருந்தாலும் எதிர்ப்பவர். அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணி, தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணி, என்றுமே இவர் அஞ்சியதில்லை. இவரது தன்னலமற்ற நல்ல சேவைக்குக் கிடைத்த பெரிய பரிசு என்ன? இது போல் நல்ல நல்ல பரிசுகளை எல்லாம், உயர்ந்த சேவை செய்பவர்களுக்குக் கொடுக்க, இங்கு நம் நாட்டில் தானே முடியும்? மாற்றம்....மாற்றம்....ஆட்சிக்கு ஆட்சி தரும் பரிசு, மாற்றம் ஒன்றுதான்!  மன ரீதியாக...உள ரீதியாக அந்த மாற்றங்கள் தரும் ஏமாற்றங்கள் எத்தகைய வலியைத் தரும்? அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும்!


டம்மி பதவி என வர்ணிக்கப்படும் கோ-ஆப்டெக்ஸ் துறையில் கூட சகாயம் ஐ.ஏ.எஸ். மிகவும் நேர்மையாக செயல்பட்டு, அரசுக்கு வரும் கெட்ட பெயரையும், பொது மக்களுக்கு ஏற்பட இருந்த பாதிப்பிலிருந்தும் காப்பாற்றியுள்ளார்.  சிறிதுகாலம் கதர் கிராமத் தொழில் பொறுப்பதிகாரியாக இருந்த இவர், புதிய இயந்திரங்கள் வாங்கியதாகச் சொல்லி பழைய இயந்திரத்தை வாங்கிப் பொருத்திய அதிகாரிகள் நால்வரை உடனடியாக தற்காலிகப் பணி நீக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல சென்னையிலுள்ள குறளகத்தில் நீராவிக்குளியல், தண்டுவடக் குளியல் மற்றும் மசாஜ் போன்றவற்றை அறிமுகப்படுத்தி அதிலும் தனது தனி முத்திரையைப் பதித்துள்ளார்.


தேர்ந்தெடுக்கப்பட்ட‌ அரசுகள் 5 ஆண்டுகளுக்கு எந்தப் பங்கமும் இல்லாமல் இயங்கவேண்டும் என்று நினைக்கிற அரசுகள் சகாயம் போன்ற அதிகாரிகளைப் பந்தாடும் போக்கு சரியா?

மக்கள் நலனுக்காக பாடுபடுவதாகச் சொல்லும் அரசு அதே மக்கள் நலனுக்காக அதுவும் அந்த மாவட்ட மக்களே விரும்பும் ஒரு செயல் திறன் மிக்க ஒரு அதிகாரியை மாற்றிட வேண்டிய அவசியம் என்ன?

மனித நேயமும்,மக்கள் பணியே மகேசன் பணி என்று பணி புரியும் இவரையும் இவர் போன்ற அதிகாரிகளையும் ஆட்சியாளர்கள்ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து பணிபுரிய அனுமதித்தால் தமிழகம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாறும் நிலை வரும்!  இவரை போன்ற நல்ல மனிதர்களை, நம் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக அறியத்தருவோம். நல்ல சமூகத்திற்கு வழிகாட்டுவோம்.

"மக்கள் நலன்"ஒன்றையே பிரதானமாகக் கொண்டு உழைக்கும் என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய சகோதரர்திரு.சகாயம் அவர்கள் குறித்து நான் திரட்டிய தகவல்களை மக்கள் படித்து அறிய வேண்டும் என்ற ஆவலில் இந்தப் புத்தகத்தை கொண்டுவருவதில் அளவில்லா மகிழ்வெய்துகிறேன்.  என்னை இதற்காக நேரிலும் தொலைபேசியிலும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்த கோவை விஜயா பதிப்பகம் அய்யா திரு.வேலாயுதம் அவர்களுக்கும் இந்த‌ வாய்ப்பை வழங்கியமைக்காக நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
மிக்க அன்புடன்,
தமிழண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக