ஞாயிறு, 16 மார்ச், 2014

3. நீ என்னவாக விரும்புகிறாய்?

ஆய்வுக்காக சகாயம் சென்றுகொண்டிருக்கிறார். வழியில் ஒரு பெயர்பலகை. அரசினர் உயர்நிலைப்பள்ளிஎன்று பிரதானச் சாலையிலிருந்து பக்கவாட்டில் அம்புக்குறியிட்ட பெயர்பலகை.  வாகன ஓட்டுனரைவாகனத்தை திருப்பச் சொல்லி அரசினர் மேல் நிலைப்பள்ளிக்குப் போகச் சொல்லுகிறார்.

திடீரென்று கலெக்டரின் வாகனம் வந்து நின்றதும் அந்த மேல்நிலைப்பள்ளி பரபரப்பாகிறது.  தலைமை ஆசிரியர் ஓடோடி வந்து வரவேற்கிறார்.  ஒரு வகுப்புக்குள் நுழைகிறார்.   மாணவர்களுடன்சகஜமாகப் பேசி பல கேள்விகளைக் கேட்கிறார்.  சில மாணவர்களின் பெயர்களைக் கேட்கிறார்.
ஒரு தமிழ் பெயரைக் கேட்டதும், நல்ல தமிழ் பெயர் வைத்திருக்கிறாயே, அந்தப் பெயருக்கு என்ன‌ பொருள் தெரியுமா? அந்த மாணவருக்குச் சொல்லத் தெரியவில்லை. பின்னர் இவரே பெயர்விளக்கம் சொல்லுகிறார்.

அடுத்த வகுப்புக்கு போகிறார். அங்கும் மாணவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கிறார்.அதில் ஒரு மாணவரின் துணிச்சலான பதிலையும் பார்த்து வாகனத்திலிருந்து ஒரு பொன்னாடையைஎடுத்துவந்து அந்த மாணவருக்குப் போர்த்துகிறார். நன்றாகப் படிக்க வேண்டும்,என்று சொல்லி வாழ்த்திவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

மாணவர்களிடம் தன்னம்பிக்கையை விதைக்கத் தவறுவதில்லை, அவர்."தன்னம்பிக்கையை எக்கணமும் தவறவிடக் கூடாது. தன்னம்பிக்கைதான் மனிதனை வளர்த்தெடுக்கும். வகுப்பறையில் தான் இன்றைய இந்தியா உருவாகிறது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கூற்று உண்மைதான். இன்றைய சூழலில், இளைஞர்கள், மாணவர்களின் ஒழுக்க நிலை கேள்விக்குரியதாகிவிட்டது வேதனையளிக்கிறது என்று சொல்வார் சகாயம்.

ஏழைகளின் கடைசி நம்பிக்கை அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் போன்றவைதான் என்று, சகாயம்உறுதியாக எண்ணினார். அதனால்தான் அவர் செல்லுமிடங்களில் எல்லாம் அரசுப்பள்ளிகள் எப்படி இயங்குகிறது? அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எப்படிச் செயல்படுகின்றன என்பதை தான் போகும் வழியில் ஆய்வு மேற்கொள்கிறார்.

"தமிழை வளரவைக்கும் ஊடகமாக அரசுப் பள்ளிகள் திகழ்கின்றன, என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்,சகாயம். ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பும், கடமையும் அரசுப் பள்ளிகளுக்குத்தான் உள்ளது.
இந்தப் பள்ளிகளால்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு கிராமப்புற மாணவர்களை உருவாக்க முடியும். ஆசிரியர்களுக்கு வெறும் பாடங்களை நடத்துவதுடன் அவர்களது கடமை முடிந்து விடாது,மாறாக, அவர்களை நல்ல மனிதனாக உருவாக்க வேண்டியதும் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது. எந்தச் செயலையும் துணிவோடு எதிர்கொள்ள வேண்டும் அப்போதுதான் அது வரலாறாக மாறும்," என்று பள்ளிகளில்பேசும்போது குறிப்பிடத் தவறுவதில்லை.

அங்கிருந்து பயணப்பட்டு எந்த ஆய்வுக்காகக் கிளம்பினாரோ அங்கு போகிறார். தன் ஆய்வுப்பணியைச்செய்து கொண்டிருக்கும்போது அந்தக் கிராமத்து மக்கள் ஒரு சிலர் வந்து நின்றுகொண்டிருக்கிறார்கள்.ஆட்சியரோடு வந்த அரசு அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து கிளம்பும்படி விரட்டுகிறார்கள்.  இதைக் கவனித்த ஆட்சியரோ, "அவர்களை ஏன் விரட்டுகிறீர்கள்?," அழைத்து விசாரிக்கிறார்.

"கலெக்டரு வந்துருக்கார் நம்மூருக்குன்னு சொன்னாங்க. மவராசனை பாத்துட்டுப் போகலம்னுவந்தோம்,"என்கின்றனர்.

"நீங்க என்ன பண்றீங்க? விவசாயமா? இல்ல..தொழில் எதாவது செய்றீங்களா?" கேட்கிறார், சகாயம்.

"வெவசாயம்தான் பாக்குறோம். செடியில பூச்சிவிழுந்து சீக்கு மாதிரி வந்துருச்சு," விவசாயி
அவரோட கவலையைச் சொல்லுகிறார்.

"விவசாய அதிகாரிகள் இங்க வருவாங்களே, அவங்ககிட்டச் சொன்னீங்களா?"

"அப்படி யாரும் வர்றதில்லங்க. டவுனுக்குப் போனா ஒரக்கடையில சொன்னா மருந்துதருவாங்க; அதவாங்கி அடிப்பொமுங்க. இந்தத் தடவை வாங்கியடிச்சு ஒண்ணும் சரியாகலைங்க..."

"அக்ரிகல்ச்சர் ஆபீஸ்ல இருந்து யாரும் வர்றதில்லையா? இவ்வளவு பெரிய ஊருக்கு வந்து இதெல்லாம்கேக்கணுமா இல்லையா?"

"இல்லைங்க அய்யா...எனக்குத் தெரிஞ்சு யாரும் வர்றதில்லங்க.  சமயத்துல கெணத்துல பீஸ் போயிருச்சுன்னாடவுனுக்குப் போயி ஈ.பி. ஆபீசுல போய் சொல்லீட்டு வந்தா ஒரு சமயம் மறுநாள் வருவாங்க; இல்லைன்னா
ரெண்டு நா கிருமிச்சு வருவாங்க..." கிராமத்துப் பெரியவரின் புகார் வாசிப்பில் அதிர்ந்து போவார்,ஆட்சியர்.

"சம்பந்தப்பட்ட இரண்டு அலுவலர்களையும் நாளைக்கு என்னை அலுவலகத்துல வந்து பாக்கச்சொல்லுங்க,"என்று தம் உதவியாளர்களிடம் சொல்லிவிடுவார்.  மறுநாள் சகாயம் காய்ச்சி எடுத்ததுல கிராமத்துக்கே போகாத‌அதிகாரிகள் கிராமத்துக்கு ஓடுவார்கள்.

அந்தக் கிராமத்திலிருந்து கிளம்பும் முன் அந்தப்பெரியவர்களிடம் ஊரில் வேறு என்ன பிரச்னைகள் இருக்கிறது,என்று கேட்கத் தவறமாட்டார்.  அவர்கள் சொல்லும் பிரச்னைகளுக்கு அடுத்த சில நாட்களில் தீர்வு கிடைக்கும்.

அந்தக் கிராமத்தை விட்டுக் கிளம்பும் முன் அங்குள்ள துவக்கப்பள்ளிக்குப் போகிறார்.  பிள்ளைகளோடுஉன் பெயர் என்ன? உங்க அப்பா பெயர் என்ன? அப்பா என்ன வேலை செய்யறார்? இப்படிக் கேள்விகேட்டு இப்ப என்ன பாடம் படிச்சுக்கிட்டு இருந்தீங்க? என்று கேட்டு அந்தப் பாடத்திலிருந்து கேள்வி கேட்பார்.

வ.ஊ.சி.ன்னா யார்? கேட்பார். தெரியலைன்னா நம்ம நாட்டுத் தலைவர்கள் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கணும்.அடுத்த தடவை இங்க வரும்போது  நான் கேட்பேன்," என்று சொல்லுவார்.  

இப்படித்தான் ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவனை ஆங்கிலத்தில் கேள்வி கேட்கிறார்? சரியோ தவறோடக்..டக்...ன்னு பதில் சொல்கிறான் ஒரு மாணவன். கடைசியாக ஒரு கேள்வி கேட்கிறார். "எதிர்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாய்?
"நான் ஒரு மருத்துவர்.  I am a doctor..." பிழையாகச் சொல்கிறாயே..கொஞ்சம் திருத்திச்
சொல்பார்க்கலாம்...." என்கிறார்.

சிறுவன் கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்கிறான்...."I am a future doctor..." என்கிறான்.  அவனால்,   அதுவரை யோசித்துச் சொன்னதைப் பாராட்டி தன் உதவியாளரை அனுப்பி ஆங்கிலம் - தமிழ் அகராதியொன்று வாங்கிவரச் சொல்லி அந்த மாணவனிடம் கொடுத்து அந்த மாணவனுக்கு ஒரு பொன்னாடையைப் போர்த்தி கெளரவிக்கிறார்.



தான் செல்லும் விழாக்களுக்கு தனக்கு அணிவிக்கப்படும் "பொன்னாடைகள்" அனைத்தையும் பத்திரமாக காரில் வைத்துக்கொண்டு அதனை தாம் போகும் இடங்களில் பயிலும் மாணவர்களுக்கோ,கிராமத்தில் ஒரு பெரியவருக்கோ அந்தப் பொன்னாடைகள் போய்ச் சேரும். தனக்குப் போர்த்தப்படும் பொன்னாடைகளைக் கூட தனக்காக வைத்துக்கொள்ளாதவர் சகாயம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக